மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட பரபரப்பு: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜ...தேவேந்திர பட்நவிஸ் நாளை முதல்வராக பதவியேற்பு?

மும்பை: மகாராஷ்டிரா கவர்னரை முதல்வர் பட்நவிஸ் இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அவர் நாளை முதல்வராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ-சிவசேனா  கூட்டணி 161 இடங்களை கைப்பற்றியது. மெஜாரிட்டிக்கு 145 இடங்கள் மட்டும் தேவை என்பதால், இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சமபங்கு  ஆகிய கோரிக்கைகளை சிவசேனா வலியுறுத்தியது.

இதனை ஏற்க பாஜ திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதனால், தேர்தல் முடிவு வெளியாகி 16 நாட்களாகியும் மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இன்னொரு புறம், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன்  சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்க முயற்சித்து வந்தது. இந்த கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளிக்கச் செய்யவும் அக்கட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால், எதிர்க்கட்சியாக செயல்பட தேசியவாத காங்கிரஸ் முடிவு  செய்திருப்பதாக சரத் பவார் நேற்று தெரிவித்தார். நேற்று சரத் பவாரை அவரது வீட்டில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த சரத் பவார், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் அந்த ஆட்சிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்றும் கடந்த சில நாட்களாக  செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதற்கு வாய்ப்பில்லை. சிவசேனாவும் பாஜவும் 25 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளன. இப்போது அவர்களிடையே பிரச்னை இருந்தாலும் அவர்கள் விரைவிலேயே ஒன்று கூடிவிடுவார்கள்.
மகாராஷ்டிராவில் பாஜ-சிவசேனா கூட்டணிதான் ஆட்சியமைக்க வேண்டும்.

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்க்கட்சிகளாக செயல்படும். எங்களிடம் பெரும்பான்மை இருந்திருந்தால் நாங்கள் ஆட்சியமைக்க எப்போதோ உரிமை கோரியிருப்போம். எங்களிடம் 100  எம்.எல்.ஏ.க்கள் கூட கிடையாது. அதனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றார்.  சரத் பவாரின் இந்த முடிவால், பாஜ அல்லாத புதிய கூட்டணி ஆட்சியமைக்கும் சிவசேனாவின் முயற்சிக்கு பெரும் பின்னடைவு  ஏற்பட்டுள்ளது. நாளை இரவுடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில், மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில், நாளை மறுநாளுடன் கெடு முடிவதால் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று பாஜ முதல்வர் பட்நவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் பாஜ  உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஆளுநர் பாஜவுக்கு அழைப்பு விடுப்பார் என்றும், அதை ஏற்று முதல்வராக பட்நவிஸ் நாளை பதவி ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாஜவுக்கு இப்போது 105 எம்எல்ஏக்கள் மட்டும்  உள்ளனர். சுயேட்சைகள் 15 பேர் அந்த கட்சியை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இன்னும் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. பதவி ஏற்ற பின் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபித்தாக வேண்டும். எனவே மெஜாரிட்டியை நிரூபிக்க  பாஜ என்ன செய்ய போகிறது, எதிர்க்கட்சிகளை உடைத்து எம்எல்ஏக்களை இழுக்குமா என்ற உச்சக்கட்ட பரபரப்பு மகாராஷ்டிராவில் நிலவி வருகிறது.

Tags : Devendra Patnaik ,Bajaj ,BJP ,Maharashtra , Bajaj: BJP claims right to rule in Maharashtra Devendra Patnaik to be sworn in tomorrow?
× RELATED கம்பத்தில் பஜாஜ் நிதி நிறுவனத்தில்...