×

அரசுப்பள்ளி மாணவிகள், முதியவர்களுக்கு இலவசம்: ஆட்டோ ஓட்டி ஏழைப்பெண்களை படிக்க வைக்கும் ராஜி அக்கா!

பிரசவத்திற்கு இலவசம் என பல ஆட்டோக்களில் எழுதியிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் சாதாரண நிலையில் உள்ள ஒரு பெண்மணி... பிரசவத்திற்கு மட்டுமல்ல... பெண்கள், முதியவர்கள், அரசுப் பள்ளி மாணவிகளை தனது ஆட்டோவில் இலவசமாக ஏற்றி செல்கிறார். ஏழைப்பெண்களை படிக்க வைப்பதற்காக வங்கி கணக்கு துவங்கி பணமும் சேர்த்து வருகிறார். சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ராஜி. பலரால் ராஜி அக்கா என அழைக்கப்படும் இவர்  ஏழை குழந்தைகளின் வாழ்வு உயரவேண்டும் என்ற எண்ணத்துடன், அதிக நேரம் ஆட்டோ ஓட்டி அதில் வரும் பணத்தில் ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க இருக்கிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளை இலவசமாகப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார் ராஜி.
ராஜி ஊபரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். ஊபர் பயணங்களை முடித்துக் கொண்டு, இரவு  வீட்டிற்கு வரும் வழியில் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் கட்டணம்  இல்லாமல் ஆட்டோ ஓட்டுகிறார். இரவு 9 மணிக்கு மேல், 5 கிலோ மீட்டர் தூரம்வரை இலவசமாக அவர்கள் பயணிக்க உதவுகிறார். அதுமட்டுமில்லாமல் ஏதேனும் அவசரம்  என்று பெண்கள் இரவில் எந்த நேரத்தில் ஃபோன் செய்தாலும் அவர்களுக்கு சென்று உதவுகிறார். மூன்று பெண் குழந்தைகளுக்கு அடுத்த ஆண்டிற்கான பள்ளிக்  கட்டணத்தை செலுத்த உள்ள ராஜி அக்கா இதற்காக கடுமையாக மெனக்கெடுகிறார்.  அதாவது மாதத்திற்கு இரண்டு நாட்கள், இரண்டாவது மற்றும் நான்காவது  சனிக்கிழமை ஆகிய இரு நாட்களில் 16 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆட்டோ ஓட்டி,  அதில் வரும் பணத்தை அதற்காக அவர் தொடங்கியுள்ள வங்கிக் கணக்கில் செலுத்தி  வருகிறார். அந்தப் பணம் ஏழை பெண் குழந்தைகளின் கல்விக்கு செலவழிக்கப்படும்.

இதுபற்றி அவர் கூறுகையில், “பெரம்பூர் - வெப்பேரி இடையே காலை அரசு பஸ்களில் அதிக நெரிசல் இருப்பதால், அரசுப் பள்ளி மாணவிகள், பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அதனை நான் பல முறை பார்த்திருக்கிறேன். அதனால், அவர்களுக்கு இலவசமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன்,” என்கிறார். “என் வீட்டில் ஆறு பெண் குழந்தைகள் என்பதால், எங்களை படிக்க வைக்க எங்கள் தந்தையால் முடியவில்லை. நான் மட்டும் மிகவும் போராடி என் படிப்பை முடித்தேன். எங்களைப் போன்று பல பெண்கள் காசு இல்லாமல் படிக்க முடியாத நிலை இன்றும் இந்தியாவில் இருக்கிறது. அவர்களின் வாழ்விலும், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சமூகத்தில் ஒரு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவே இதனை செய்து வருகிறேன். இதற்காக என் குடும்பம் மிகுந்த ஆதரவாக உள்ளனர்’’ என்றார். ராஜி அக்கா மேலும் கூறுகையில், ``5  ஆண்டுகளுக்கு முன்பு நான் வீட்டிற்கு வரும் வழியில், ஒரு பெண்ணை  பார்த்தேன். திருமணத்திற்கு போய்விட்டு வந்ததுபோல இருந்தார். நிறைய நகைகள்  போட்டிருந்தார். அவர் பயணம் செய்த ஆட்டோவை ஓட்டிவந்த டிரைவர் மது  குடித்திருந்தார். அப்போது என் வாடிக்கையாளரை கூட மறந்துவிட்டு, அந்தப் பெண்  பாதுகாப்பாக சென்றாரா என்று அந்த ஆட்டோ பின்பு சென்று உறுதி  செய்துகொண்டேன். தற்போது பெண்களுக்கு எதிராக நிறைய சம்பவங்கள் நடக்கின்றன. வெளியே வரும்  பெண்கள், பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல என்னால் முடிந்த அளவிற்கு உதவி  செய்கிறேன்” என்றார். ராஜி அக்காவின் எண்ணத்திற்கு ஒத்தாசையாக இருக்கும் அவரது கணவரும் ஆட்டோ ஓட்டுனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண் கல்விக்கு உதவவும், யாரிடமும் எந்த நிதியுதவியும் பெறாமல், எந்த ஆணின் உதவியையும் எதிர்பார்க்காமல் தானே களத்தில் இறங்கி இருக்கும் ராஜி அக்காவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

Tags : girls ,seniors ,Government school students , Government school, elderly, free
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்