×

தேவசம் போர்டு அதிகாரிகளின் அலட்சியத்தால் சுசீந்திரத்தில் திறந்து கிடக்கும் சிறிய தேர்: இரும்பு சக்கரம் பொருத்தும் பணி தாமதம்

நாகர்கோவில்: சுசீந்திரத்தில் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் சிறிய தேர் திறந்த வெளியில் கிடக்கிறது. இதற்கிடையே இரும்பு சக்கரம் பொருத்தும் பணியும் தாமதமாகி உள்ளது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சுசீந்திரத்தில் கோலாகலமாக நடக்கும் மார்கழி திருவிழா என்பது குமரி மாவட்டத்தின் பாரம்பரிய திருவிழாவாகும். மிகவும் பழமையான, அனைவராலும் கொண்டாப்படும் இந்த திருவிழாவை முன்னிட்டு நடக்கும் தேரோட்டத்தில் குமரி மட்டுமில்லாமல் வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து தொட்டு இழுப்பது வழக்கம். ஆகவே பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் மட்டுமில்லாமல், குடும்பமாக நடந்து வருகின்ற பக்தர்களும் இந்த திருவிழாவில் இன்று வரை ஏராளமாக பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயில் பெரிய தேரின் சக்கரங்கள் தற்போது இரும்பு சக்கரங்களாக மாற்றப்பட்டு உள்ளன. தற்போது 2வதாக வரும் சிறிய தேருக்கும் இரும்பு சக்கரம் ெபாருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பே சிறிய தேரினை சுற்றி உள்ள இரும்பு தகடுகள் அகற்றப்பட்டன. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை தேரின் சக்கரங்கள் மாற்றப்படவில்லை. தேரைச் சுற்றி உள்ள இரும்பு தகடுகளை கொண்டு மீண்டும் மூடப்படவும் இல்லை. இதனால் தேரை சுற்றிலும் குப்பை, கூளங்கள் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. நாய்களும் அந்த இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளன.

தற்போது பெய்த கனமழைக்கு தேரின் ஒரு பகுதி மழை நீரில் நனைந்தும், வெயிலில் காய்ந்த படியும் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக உள்ளூரை சேர்ந்த பக்தர்கள் சிலர் கோயில் நிர்வாகி யை சந்தித்து புகார் தெரிவித்து இருக்கின்றனர். உடனே அவர் இது தேவசம் போர்டு அதிகாரிகள்தான் பொறுப்பு. எனவே இணைஆணையரிடம் புகார் செய்யுங்கள் என்று கூறி அனுப்பியதாக தெரிகிறது. தேவசம் போர்டு அதிகாரிகளோ, புகாருடன் வந்த பக்தர்களிடம் பேசி இருக்கின்றனர். அப்போது விரைவில் சரி செய்கிறோம் என்று கூறி இருக்கின்றனர். ஆனால் இதுவரையிலும் எந்த பணியும் நடக்கவில்லை. எனவே புகாருடன் சென்ற எங்களை அதிகாரிகள் சமாளித்து அனுப்பி இருக்கின்றனர் என்பது தெரியவந்து இருக்கிறது என்று பக்தர்கள் தரப்பில் கூறி உள்ளனர். அடுத்த மாதம் மார்கழி திருவிழா தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேரை முறையாக பராமரிக்காமல், அப்படியே வெயிலில் காயவும், மழையில் நனையவும் விட்டுள்ளது சுசீந்திரம் கோயில் பக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் திருத்தேர் சக்கரத்தை மாற்றவும், திருவிழாவிற்கு முன்பு பராமரிப்பு பணியை செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

பாலம் தயார் ஆகுமா?

சுசீந்திரம் தெற்கு ரதவீதியில் வட்டப்பள்ளி மடம் அருகே, ேபரூராட்சி நிர்வாகத்தால் கழிவுநீர் ெசல்ல தற்போது கால்வாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கால்வாய்க்காக தெற்கு ரதவீதியின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதனால் தற்போது ரதவீதிகளில் வலம் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெற்குமண், கற்காடுக்கு செல்பவர்கள், வடக்கு ரதவீதி வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் பாலத்தை உடனே அமைக்க வேண்டும். திருத்தேரின் எடையை தாங்கும் வகையில், உறுதியுடனும், தரத்துடனும் கட்டவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : board officials ,Suicindra ,Small Chair ,Opening Suchendra: Iron Wheel Delay ,Devasam Board of Officers , Devasam board, Suchindram, chariot, iron wheel
× RELATED பாலாற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பு,...