×

பாஜவினர் காவி துண்டு அணிவிப்பதாக ரகசிய தகவல்: சென்னிமலையில் வள்ளுவர் சிலைக்கு விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு

சென்னிமலை: சென்னிமலையில் வள்ளுவர் சிலைக்கு பாஜவினர் காவிதுண்டு அணிவிப்பதாக வந்த தகவலை அடுத்து சிலைக்கு போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது சில விஷமிகள் சாணி பூசி அவமதிப்பு செய்தனர். இதற்குப் பலத்த கண்டனம் எழுந்தது. திருவள்ளுவர் சிலையைச் சுத்தம் செய்து மாலை அணிவித்த தமிழ் அமைப்பினர் இந்தச் செயலைச் செய்த நபர்களைக் கைது செய்ய வலியுறுத்தினர்.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று தஞ்சைக்குச் சென்று பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, மாலை ஆகியவற்றை அணிவித்தார். பின்னர் ருத்ராட்ச மாலை அணிவித்து, திருநீற்றைப் பூசி கற்பூரம் ஏற்றி வள்ளுவருக்கு தீபாராதனை காட்டினார். அர்ஜுன் சம்பத்தின் இச்செயல் மூலம் மீண்டும் பதற்றம் உருவாக வாய்ப்புள்ளது எனக் கருதிய போலீசார் உடனடியாக அர்ஜூன் சம்பத்தைக் கைது செய்தனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் புதிய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம் சார்பில் கடந்த 97ம் ஆண்டு அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலைக்கு பாஜகவினர் காவிதுண்டு அணிவிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் விடிய விடிய வள்ளுவர் சிலைமுன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Bhaijavier ,statue ,Valluvar , Statue of BJP, Chennimalai, Valluvar and police protection
× RELATED 108 ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்து கொள்ள...