×

தெலுங்கானா தாசில்தாரை தீ வைத்து எரித்துக்கொன்ற நபர் உயிரிழப்பு: 65% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம்

திருமலை: தெலுங்கானா மாநிலத்தில் தாசில்தார் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜயா ரெட்டியை எரித்துக் கொன்ற சுரேஷ் என்பவரும் உயிரிழந்துள்ளார். 65 % தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெலங்கானாவின், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லபூர்மெட் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வந்தவர் விஜயா (38). இவருக்கு கணவன் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதே தாலுகா கவுரல்லி கிராமத்தைச் சேர்ந்தவர்  சுரேஷ் (40). இவருக்கு 7 ஏக்கர் நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்துள்ளது.  இந்த பிரச்னைக்கு தாசில்தார் விஜயா தீர்வு காண  வேண்டும் என கடந்த 2 மாதங்களாக சுரேஷ் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த நில  விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இதுகுறித்து எந்த  முடிவும் எடுக்க முடியாது என தாசில்தார் விஜயா கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தாசில்தார் விஜயாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

இதையடுத்து, கடந்த 4ம் தேதி மதிய உணவு இடைவேளையில் தாசில்தாரை சந்தித்து பேசியுள்ளார். தாசில்தாரை தனது நிலம் வேறு ஒருவர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுரேஷ் தாசில்தார் விஜயா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் விஜயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், விஜயாவை காப்பாற்ற முயன்ற அவரது டிரைவர் குருநாதமும், குமாஸ்தாவும் கடுமையான தீக்காயங்களுடன் கஞ்சன்பாக் பகுதியில் உள்ள அப்பல்லோ டி.ஆர்.டி.ஓ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், 80 சதவீதம் தீக்காயங்கள் அடைந்த டிரைவர் குருநாதம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தாசில்தாரின் குமாஸ்தா சந்திரையாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாசில்தார் விஜயாவுக்கு தீ வைத்து எரித்த போது, சுரேஷ் மீதும் தீ பற்றிக்கொண்டது. அவரும் 65 சதவீத காயங்கள் ஏற்பட்ட நிலையில், சுரேஷ் நடந்து சென்று ஐ.எஸ் நகர் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். இதையடுத்து, சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 3.45 மணிக்கு உயிரிழந்துள்ளார்.

Tags : Telangana Dasillard , Telangana, tehsil, erittukkolai, fire, Suresh, guilty, dies
× RELATED நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப்...