×

ஆந்திர முதலவர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டு ஜன்னல்களை சரிசெய்ய ரூ.73 லட்சம் செலவு: சந்திரபாபு நாயுடு சாடல்

ஐதராபாத்: வீட்டு கதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு செய்து உள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து விமர்சனம்  எழுந்துள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, அதன் தலைவரான  ஜெகன் மோகன் ரெட்டி கடந்த மே 30-ம் தேதி ஆந்திரா மாநில முதல்வராக பதவியேற்றார். ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி  பதவியற்றுக்கொண்டதில் இருந்து அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக, ஜெகன் மோகன் ரெட்டி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர்  மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளான நவம்பர் 11-ம் தேதி தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், ஆந்திரப் பிரதேச  அரசு சார்பில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிரதிபா புரஸ்கர் என்ற விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவந்தது. ஆனால், ஆந்திர அரசு அந்த விருதுகள்  இனிமேல் ஓய்.எஸ்.ஆர் வித்யா புரஸ்கர் என்ற பெயரில் வழங்கப்படும் என்று அறிவித்தது.

ஆந்திர அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, அப்துல்கலாம், காந்தி, அம்பேத்கர் பெயர்களில் வழங்கப்படும்  விருதுகள் அதே பெயரில் வழங்கப்படவேண்டும் என்று அதிகாரிகளைக் கண்டித்தார்’ என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஆந்திர மாநில முதலவர் ஜெகன்மோகன் ரெட்டி வீடு குண்டூர் மாவட்டத்தில் ததேபள்ளி கிராமத்தில் உள்ளது. அந்த வீட்டிற்கு  ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு ரூ.73 லட்சம் செலவு செய்யப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு  நாயுடு முதலமைச்சரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு எவ்வளவு பணம் செலவிட்டார் என்பது குறித்து கேள்விகளை எழுப்பினார். இது குறித்து  சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டரில், ஒய்.எஸ்.ஆர் ஜெகனின் அரசு அவரது வீட்டிற்கான ஜன்னல்களை சரிசெய்ய ரூ.73 லட்சம் ஒதுக்கியுள்ளது.  தவறான நிர்வாகத்தின் கடந்த 5 மாதங்களில் இந்த செலவு உண்மையிலேயே பயமுறுத்துகிறது என்று பதிவிட்டுள்ளார்.

மே மாதம் நடந்த ஆந்திர மாநிலத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடனேயே, குண்டூரின் ததேபள்ளி கிராமத்தில்  உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் ரோடு மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து 5 கோடி ரூபாய் செலவில் போடப்பட்டது. வீட்டில் மின்  பணிகளுக்காக பில் ரூ.3.6 கோடி செலவிடப்பட்டது. அதுபோல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க கூடுதல் நிலம் வாங்க 3.25 கோடி ரூபாய்  செலவிடப்பட்டது. தொடர்ந்து சில நாட்களில் ஒரு ஹெலிபேட் கட்டுமானம் மற்றும் பிற பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ரூ.1.89 கோடி செலவிடப்பட்டது  என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Jaganmohan Reddy ,AP ,Chandrababu Naidu Sadal , Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy has spent Rs 73 lakh to repair windows: Chandrababu Naidu
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...