×

கர்தார்பூர் வரும் யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் கொண்டு வருவது குறித்து பாகிஸ்தான் குழப்பமான தகவல்களை தருகிறது: இந்தியா குற்றச்சாட்டு

டெல்லி: கர்தார்பூர் வரும் யாத்ரீகர்கள் பாஸ்போர்ட் கொண்டு வருவது குறித்து பாகிஸ்தான் குழப்பமான தகவல்களை தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின், 550வது பிறந்த தினம், 12-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. குருநானக்கின் சமாதியான கர்தார்பூர் சாஹிப், பாகிஸ்தானில், சர்வதேச எல்லையை ஒட்டி, ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை சீக்கியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். குருநானக் சமாதிக்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் நகரிலிருந்து சர்வதேச எல்லை வரை, மத்திய அரசு சிறப்பு பாதை அமைத்துள்ளது. அதேபோல் பாக்., எல்லையிலிருந்து கர்தார்பூர் சாஹிப் வரை பாகிஸ்தான் சிறப்பு பாதை அமைத்துள்ளது.

இந்தப் பாதை நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளது. கர்தார்பூர் சாஹிப்புக்கு செல்ல இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், டுவிட்டர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் கர்தார்பூர் பாதை தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையா இல்லையா என்பது பற்றி விளக்கும்படி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. கர்தார்பூர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானில் இருந்து குழப்பமான தகவல்கள் வருகின்றன என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் டெல்லியில் தெரிவித்தார். யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவை என முதலில் தகவல் வந்தது. பின்னர் தேவையில்லை என வந்தது. அங்குள்ள வெளியுறவு அமைச்சகம் மற்றும் மற்ற அமைப்புகள் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

கர்தார்பூர் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனை மாற்ற முடியாது எனவும் இந்த ஒப்பந்தப்படி பாஸ்போர்ட் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்கள் என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தம் மூலம் நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம் என தெரிவித்தனர். இந்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் தன்னிச்சையாக யாரும் மாற்றம் செய்ய முடியாது என கூறினர். இரு தரப்பும் ஒப்பு கொண்டால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும் எனக் கூறினார்.

Tags : Pakistan ,pilgrims ,India , Pakistan,disturbing information,passport,pilgrims coming ,Gardarpur,India
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி