×

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் நிலையற்ற தன்மையை பா.ஜ.க. தான் உருவாக்கியது: சஞ்சய் ராவத் பேட்டி

மும்பை: ஆட்சி அமைப்பதில் நிலையற்ற தன்மையை பா.ஜ.க. தான் உருவாக்கியதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். சிவசேனையை சேர்ந்தவர் முதல்வராக வரவேண்டும் என்பதே எங்களது விருப்பம் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் பா.ஜ.க.- சிவசேனா கூட்டணியை உடைய விடமாட்டோம் என்று சஞ்சய் ராவத் உறுதியளித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா - சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. இதில் பாரதிய ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி கண்டன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற சூழலில் 161 இடங்களை வென்றுள்ள பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி எளிதில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அந்தக்கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது. சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்கவும் சிவசேனா முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. தொடக்கத்தில், பாஜக உடன் மத்தியில் இருக்கும் கூட்டணியில் இருந்து வெளியேறினால் கூட்டணி அமைக்க தயார் என சரத்பவார் தெரிவித்து இருந்தார். ஆனால், நேற்று சிவசேனா எம்பியும் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ராவத் சந்திப்புக்கு பின்னர் பேசிய சரத்பவார், கூட்டணி இல்லை என்பதுபோல் தெரிவித்துவிட்டார். அதாவது, ஆட்சி அமைக்க பாஜக - சிவசேனா கூட்டணிக்கே மக்கள் பெரும்பான்மை அளித்துள்ளதாகவும், தங்களை எதிர்க்கட்சியாக செயல்படவே மக்கள் வாய்ப்பளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துவிட்டார்.

இந்த சூழ்நிலையில், மராட்டிய அரசியலில் நிலவி வரும் இழுபறி நிலையை முடிவுக்கு கொண்டுவர டெல்லியில் உள்ள அனைத்து அலுவல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நிதின் கட்கரி மும்பை சென்றுள்ளார். ஆட்சி அமைப்பதில் பாரதிய ஜனதாவுக்கு, சிவசேனாவுக்கும் எந்த உடன்படும் எட்டப்படாததால் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் நிதின் கட்கரி இன்று ஆலோசனை நடத்தினார். அதேநேரம் ஆர்.எஸ்.எஸ்-ன் மத்தியஸ்தம் தங்களுக்கு தேவையில்லை என்று சிவசேனா கட்சி காட்டமாக தெரிவித்துள்ளது. தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கும் முயற்சியில் பாரதிய ஜனதா ஈடுபட்டுள்ளதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சாட்டியிருந்தார். இந்த நிலையில், மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதற்கான சட்டவாய்ப்புகள் குறித்து ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேசினார். மேலும் இந்த இழுபறி நிலையை முடிவுக்கு கொண்டுவர பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். தந்து விடாப்பிடியில் இருந்து சற்று இறங்கிவர பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் பல சுவாரசியமான நிகழ்வுகள் அரகேர வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத், ஆட்சி அமைப்பதில் நிலையற்ற தன்மையை பா.ஜ.க. தான் உருவாக்கியதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : BJP ,Maharashtra ,Sanjay Rawat , Interview with Sanjay Rawat from Maharashtra, Rashtriya Shiv Sena, BJP, Alliance
× RELATED ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கியது பா.ஜ