×

12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை மீட்ட தன்னார்வ அமைப்பு இளைஞர்கள்: பெற்றோர் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி: 12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை மீட்ட தன்னார்வ அமைப்பு இளைஞர்கள், அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் - ராஜம்மாள் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைய மகன் மனோகரனை சிகிச்சைக்காக பெற்றோர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராத விதமாக மனோகரன் காணாமல் போயுள்ளார். பல இடங்களில் தேடியும் அவர் இருக்கும் இடம் குறித்து பெற்றோர்களுக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் பசியில்லா தமிழகம் எனும் அமைப்பை உருவாக்கி தமிழகம் முழுவதும் சுற்றி ஆதரவற்றவர்களை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வு கிடைத்திட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்செங்கோடுக்கு இந்த குழுவினர் சென்றுள்ளனர். பேருந்து நிலையம் பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் சுற்றித் திரிந்த மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், மனோகரன் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

புகைப்படத்தை பார்த்த உறவினர்கள் அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோகரனை நேரில் சந்தித்த பெற்றோர், அது தன் மகன் தான் என உறுதி செய்தனர். பின்னர் சேலம் மாநகர காவல் துறையினர் முன்னிலையில் மனோகரனை அவர்களது பெற்றோர்களிடம் இளைஞர்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து பேசிய மனோகரனின் பெற்றோர் கோவையில் காணாமல் போன மகன் 12 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது தங்களுக்கு மகிழ்ச்சி. தங்கள் மகனை மீட்டு கொடுத்த இளைஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Tags : Youth volunteering ,rescue,missing son ,12 years ago,Parental happiness
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக...