×

24 மணி நேரமும் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், காவல் துறையினருக்கும் அதிக ஊதியம் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கருத்து!

சென்னை: அரசு கல்லூரி ஆசிரியர்கள் அளவிற்கு ஏன் மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற  நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு, நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பான விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு அது சம்மந்தமாக தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பினர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 24 மணி நேரமும் பணியில் இருக்கக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு 57,000 ரூபாய் தான் ஊதியம் வழங்கப்படுவதாகவும், இந்த சம்பளம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதை விட குறைவு என தெரிவித்திருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் புனிதமான பணியை செய்து வரக்கூடிய மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இளைத்து விட்டதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு மருத்துவர்களின் ஊதியத்தை பள்ளி ஆசிரியர்களின் ஊதியதோடு ஒப்பிடவில்லை என்றும், கல்லூரி ஆசிரியர்களின் ஊதியத்துடன் ஒப்பிட்டுள்ளதாகவும்  நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரசு கல்லூரி ஆசிரியர்கள் பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மானியம் பெறுகின்றனர். அந்த அளவில் ஏன் அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பினர். 24 மணி நேரமும் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், காவல் துறையினருக்கும் அதிக ஊதியம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு பணியையும் நீதிமன்றம் குறைத்து மதிப்பிடவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மாணவர்களின் கைரேகையை பெற்று, சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்க,  நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மாணவர்களின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க 90 நாட்களாகும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Tags : doctors , Government Doctors, Salary, Salary, Icort Question, Tamil Nadu, Need Impersonation, Case
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை