×

அறந்தாங்கியில் மணலுக்கு கடும் கிராக்கி: சேமிப்பு கிடங்கிற்கு செல்லும் வழியில் குவாரி மணல் முறைகேடாக விற்பனை

அறந்தாங்கி: அழியாநிலை மணல் குவாரியில் இருந்து கோவில்வயல் மணல் சேமிப்பு கிடங்கிற்கு மணலை கொண்டு செல்லும் வழியில் முறைகேடாக மணல் விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அறந்தாங்கி அருகே ஓடும் வெள்ளாற்றில் இருந்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற (தனியார்) குவாரி செயல்பட்டு வந்தது. தமிழகம் முழுதும் மணல் குவாரிகள் மூடப்பட்டபோது, வெள்ளாற்றில் செயல்பட்டு வந்த குவாரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மணல் தேவையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அறந்தாங்கியை அடுத்த பெருங்காடு அருகே உள்ள கோவில்வயல் பகுதியில் மணல் சேமிப்பு கிடங்கை அமைத்தது. இந்த கிடங்கிற்கு அழியாநிலை மற்றும் இடையாத்திமங்கலம் ஆகிய 2 இடங்களில் வெள்ளாற்றில் மணல் குவாரி அமைத்து அங்கிருந்து மணல் ஏற்றிவந்து கோவில்வயலில் சேமித்து வைத்து விற்கப்பட்டு வருகிறது.

அறந்தாங்கி பகுதியில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் ஆன்லைன் மூலம் மணல் விற்பனை என்பதால் பெரும்பாலும் வெளியூர் லாரிகளுக்கே மணல் கிடைக்கிறது. நூற்றுக்கு 2 உள்ளூர் லாரிகளுக்கு மணல் கிடைப்பதே அரிது. உள்ளூர் லாரிகளுக்கு மணல் கிடைக்காததால், அறந்தாங்கி பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளாற்றில் இருந்து பலரும் லாரிகளில் மணலை திருடி அறந்தாங்கி பகுதியில் விற்பனை செய்து வந்தனர்.
இதனை தடுக்க அறந்தாங்கி டி.எஸ்.பி கோகிலா, தாசில்தார் சூரியபிரபு ஆகியோர் தீவிர சோதனை மேற்கொண்டதால் மணல் லாரிகள், டிப்பர் லாரிகள், பொலிரோபிக்அப், மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மணல் திருட்டை தடுக்க தமிழக அரசு பல்வேறு பகுதிகளில் செக்போஸ்ட் அமைத்து, சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு பணியை பலப்படுத்தி உள்ளது. மேலும் சிசிடிவி கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதனால் லாரிகள் மூலம் நடைபெறும் மணல் திருட்டு வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் மாட்டுவண்டிகள் மூலம் நடைபெறும் மணல் திருட்டும் தடுக்கப்பட்டுள்ளது. கடும் மணல் தட்டுப்பாட்டால் கட்டிடம் கட்டுபவர்கள் மணல் கிடைத்தால் போதும் என்று ஒரு டாரஸ் மணலை ரூ.30 முதல் 40 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்குகின்றனர். மேலும் கடும் கிராக்கி உள்ளதால் சிலர் அழியாநிலை மணல் குவாரியில் இருந்து கோவில்வயல் மணல் சேமிப்பு கிடங்கிற்கு மணல் கொண்டு செல்லும் பொதுப்பணித்துறை ஒப்பந்த லாரிகளில் இருந்து சட்டவிரோதமாக மணல் இறக்குகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: அழியாநிலை மணல் குவாரியில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பொதுப்பணித்துறை ஒப்பந்த லாரிகளில் சிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மணல் முறையாக மணல் சேமிப்பு கிடங்கிற்கு செல்ல பல்வேறு நடவடிக்கை எடுத்தபோதிலும், மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் நூதனமுறையில் மணலை திருடி வருகின்றனர். அழியாநிலை மணல் குவாரியில் மணல் ஏற்றும் லாரிக்கு பர்மிட்டில் நேரம் பதிவு செய்யப்பட்டு, அடுத்த ஒரு நேரத்தில் மணல் கோவில்வயல் மணல் சேமிப்பு கிடங்கில் இறக்க வேண்டும். அதேபோல பொதுப்பணித்துறை ஒப்பந்த லாரிகளில் மணல் ஏற்றப்பட்டவுடன் அந்த லாரிகளில் ஒரு சில நடைகள் முறைகேடாக அறந்தாங்கி பகுதியில் இறக்கப்படுகிறது. பின்னர் அந்த லாரியில் ஏற்றப்பட்ட மணல் பர்மிட்படி கோவில்வயல் மணல் சேமிப்பு கிடங்கிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக அழியாநிலை குவாரிக்கு செல்லும் பாதைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள மற்றொரு பாதை (சிசிடிவி கேமராவிற்குள் சிக்காதவாறு) சென்று, மறுபடியும் மணல் ஏற்றிக்கொண்டு, கோவில்வயலுக்கு அந்த லாரி சென்றுவிடும்.

இவ்வாறு பர்மிட் போடப்பட்டுள்ள ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு நடைகள் (ஒரு நடை அரசுக்கு, மற்றொரு நடை மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு என) மணல் அள்ளி உரிய இடத்தில் சேர்ப்பதற்காக பல குழுக்களே இயங்கி வருகின்றன.
காவல்துறை, வருவாய்த்துறை லாரிகளை ஆய்வு செய்வதில்லை என்பதால் அரசு மணல் குவாரிதானே என்று சிலர் குவாரியில் இருந்து சேமிப்பு கிடங்கிற்கு செல்லும் மணலை இடையிலேயே விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags : warehouse ,Charity: Quarry ,Sand ,Aranthangi , Sand, Aranthangi
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்