மின்விளக்குகளும் எரிவதில்லை: படந்தால் கிராமத்தில் சாலைகள் படுமோசம்

சாத்தூர்: சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தில் சாலை சரியில்லாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மின்விளக்குகள் எரிவதில்லை, குப்பைகளையும் அள்ளுவதில்லை என மக்கள் புலம்புகின்றனர். சாத்தூர் அருகேயுள்ளது படந்தால் கிராமம். இங்கு தென்றல்நகர், மருதுபாண்டியர் நகர், முனியசாமி கோவில் தெரு, வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாலை சேதமடைந்து காணப்படுகின்றது. மக்கள் நடக்க முடியாமல் குண்டும், குழியுமாக கட்சியளிக்கிறது. டூவீலர்களில் சென்றால் பள்ளத்தில் கீழே விழும் நிலை ஏற்படுகிறது. சிறுமழை பெய்துவிட்டால் சேறும், சகதியாக மாறிவிடுகிறது. அதிகளவில் மழை பெய்தால் இப்பகுதியில் மழைநீர் தேங்கி ஒரு குளம்போல் காட்சியளிக்கும்.

மேலும், முறையான வாறுகால் வசதியில்லாததால் கழிவுகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. தினசரி துப்புரவு பணிகள் நடக்காததால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தெருவிளக்குகள் இருந்தும் சரிவர எரிவதில்லை. தேவையுள்ள இடங்களில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. ஒரு மாதத்திற்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது என மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த கருப்பசாமி கூறுகையில், இங்கு முறையான வாறுகால் வசதியில்லாததால், கழிவுகள் ஆங்காங்கே பரவி கிடக்கிறது. போதிய குப்பை தொட்டிகள் இல்லாததால் மண்ரோட்டில் தான் கழிவுகளை கொட்ட வேண்டியுள்ளது. இதனால் சுகாதாரக்கேடு, துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் தினசரி துப்புரவு பணி நடப்பதில்லை. எனவே, இப்பகுதியில் கூடுதல் பணியாளர்கள் நியமித்து, தினசரி துப்புரவு பணி செய்ய,  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

ஐயப்பன் கூறுகையில், மோசமான நிலையில் உள்ள படந்தால் பேருந்து நிறுத்த நிழற்குடையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் பல தெருவிளக்குகள் எரியாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் மேடு, பள்ளம் தெரியாமல் தவறி விழும் நிலை இருக்கிறது. ஏற்கனவே, தார்ரோடு அமைக்காமல் மண்ரோடாக இருப்பதால், மழைக்காலங்களில் தட்டு தடுமாறித்தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, அதிகரித்து வரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப, ரோட்டினை சீரமைத்து கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க,  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>