×

மோப்பிரிபாளையம் தொழில்நுட்ப பூங்காவில் ஆக்கிரமிப்பு அகற்றம்

சோமனூர்: கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள மோப்பிரிபாளையத்தில் புதிதாக அமைய உள்ள தொழில்நுட்ப பூங்காவினை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த குடிசைகள் சூலூர் தாசில்தார் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. சோமனூர் அடுத்த மோப்பிரிபாளையம் பகுதியில் 250 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. கொடிசியா சார்பில் அமைக்கப்பட இருக்கும் இந்த சிறுதொழில் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த பிப்ரவரி 6ம் தேதி நடைபெற்றது.

 இதில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோப்பிரிபாளையத்தில் புதிய கொடிசியா சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தை அமைப்பதற்காக அடிக்கல்லை நாட்டினார்.  இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தினர் தங்களுக்கு கடந்த 1956 ம் ஆண்டு சென்னை பூமிதான அமைப்பு 2 ஏக்கர்  இலவச நிலம் வழங்கியதாக கோரி அப்பகுதியில் குடிசை அமைத்து ஆக்கிரமித்து இருந்தனர். இது பற்றி தகவலறிந்த கொடிசியா நிர்வாகத்தினர் தங்களுக்கு இந்த நிலத்தை தமிழக அரசு சிறு தொழில் பூங்கா அமைப்பதற்காக வழங்கியுள்ளதாக கூறினர்.

இதுபற்றி சூலூர் தாசில்தாரிடம் புகார் வழங்கினர். அதன்பேரில் நேற்று சூலூர் தாசில்தார் மீனாகுமாரி, கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், கொடிசியா தொழில்நுட்ப பூங்கா இயக்குனர் வரதராஜன், கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, துணைத் தலைவர் இளங்கோ ஆகியோர் அந்த இடத்துக்கு வந்தனர், இந்நிலையில் அந்தப் பகுதியில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்த பகுதியில் தங்களுக்கு 1956ம் ஆண்டு சென்னை பூமிதான அமைப்பு இலவச நிலமாக 2 ஏக்கர் நிலம் கொடுத்ததாக கோரி குடிசை அமைத்ததாக கூறினர்.

இதுபற்றி சூலூர் தாசில்தார் மீரா குமார் கூறுகையில், சென்னை பூமிதான அமைப்பு சார்பில் இந்த இடம் வழங்கப்பட்டதாக கூறுகின்றனர், சென்னையில் விசாரிக்கையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை முறையாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படவில்லை. தொடர்ந்து மூன்றாண்டுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தாவிட்டாலும்கூட இந்த நிலத்தை மீண்டும் பூமிதான அமைப்பு எடுத்துக் கொள்ளும். இவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக இந்த இடத்தில் எதுவும் சாகுபடி செய்யவில்லை. இதனால் பூமி தான இயக்கம் கொடிசியா நிர்வாகத்திற்கு வழங்கிவிட்டது. இதனால் இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று கூறினார். இதையடுத்து குடிசைகள் அகற்றப்பட்டன. அந்த இடத்தில் மீண்டும் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதற்காக கம்பி வேலிகள் அமைக்கப்பட்டது.

Tags : evacuation ,Mopiripalayam Technical Park ,removal , Aggressive removal
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...