×

பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு இன்சூரன்ஸ்: நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற முன் வருவார்களா?

பழநி: தைப்பூச திருவிழா நெருங்கி வரும் நிலையில் பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. aபழநி நகரில் உள்ள முருகன் கோயிலில் வருடம் முழுவதும் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்த சஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களிலும் இருந்தும் சாதாரண நாட்களிலேயே சராசரியாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருவர்.

பழநி கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழாவிற்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, நத்தம், மதுரை, அலங்காநல்லூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், வேடசந்தூர், கரூர், சேலம் உட்பட தமிழகத்தின் பலவேறு ஊர்களில் இருந்து வருடந்தோறும் சராசரியாக 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இத்திருவிழாவிற்கு பாதயாத்திரையாக பலநாட்கள் நடந்து வருவது வழக்கம். தொடர்ந்து வரும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து தாராபுரம் வழியாக 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து வரும் இப்பக்தர்கள் வருடந்தோறும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பக்தர்களுக்கு காப்பீடு வழங்க திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் பழநி கோயிலில் இதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே பழநி கோயிலின் சார்பில் பாதத்திரை பக்தர்களுக்கு காப்பீடு செய்யும் சேவைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் முத்துச்செல்வன் கூறியதாவது, பக்தர்கள் உயிரின் மேல் அக்கறை செலுத்தும்படியான திட்டம் இது. நீண்டகாலமாக இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நடைமுறை சிக்கல் எனக்கூறி இத்திட்டம் அமல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கான விஏஓ சான்று மற்றும் காவல்துறை பதிவு அறிக்கையில் விபத்து குறித்த விபரமும், இறந்த நபரின் விபரமும் தெளிவாக விளக்கப்பட்டு விடுவதால் இழப்பீடு வழங்குவதில் எந்தவித நடைமுறை சிக்கலும் இருக்கப்போவதில்லை. எனவே, பழநி கோயில் நிர்வாகம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Palani
× RELATED பிரபல நகைக்கடையில் 28.50 கிலோ தங்க காசு...