×

சாலையை ஆக்கிரமித்துள்ள வழிபாட்டுத்தலங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகம் முழுவதும் சாலைகள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 6ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிட கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சார்பில் பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள சாலைகள், நடைபாதைகள், நீர்நிலைகள் அரசு புறம்போக்கு நிலங்கள் அரசு அலுவலக வளாகங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும், இந்த தலங்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் 3,108 வழிபாட்டுத்தலங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வழிபாட்டுத்தலங்களை ஒரு சிலர் சுயநல லாபத்துக்காக பயன்படுத்தி வருவதாகவும், ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதுபோன்ற வழிபாட்டுத் தலங்களை அகற்ற உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஒரு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை குழு அமைக்கவிலை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலைகள், அரசு நிலங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்களை அகற்றுவது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தொடர்பாக டிசம்பர் 6ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் வக்பு வாரியம் மற்றும் பேராலயங்களின் அமைப்புகளையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags : places ,road , Roads, State Lands, Shrines, Occupation, Action, Report, Government of Tamil Nadu, High Court, Question
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்