கோவை: பார்வைத்திறன் குன்றியவர்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது அவர்கள் பயன்பெறும் வகையில் கோவை ரயில் நிலையத்தில் பிரெய்லி மேப் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அறிமுகம் செய்திருக்கும் இந்த வசதி மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் உட்பட சுமார் 74 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரயில்வே பயணிகளை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து மாற்று திறனாளிகள், முதியோர், நோயாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு செயல்பட்டு வரும் கோவை ரயில் நிலையத்தில் பார்வைத்திறன் குன்றியவர்களுக்கு என பிரெய்லி மேப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரெய்லி எழுத்து வடிவம் கொண்ட பலகை ரயில் நிலையத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதில் டிக்கெட் கவுண்டர், தகவல் மையம் ஆகியவை எளிதில் கண்டறிய மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதாக பார்வை மாற்று திறனாளிகள் கூறுகின்றனர். மேலும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ள பிரெய்லி பலகை தமிழ் மொழியிலும் வைக்கப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த பிரெய்லி மேப் கொண்டு வர வேண்டும் என்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ரயில்வே நிர்வாகம் இது போன்ற முயற்சி எடுத்திருப்பது பார்வை மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.