×

இரு மாநிலங்களின் அந்தஸ்து பெற்ற இருவாட்சி!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வாழும் மலைப்பறவை இருவாட்சி. பெரிய அலகை உடையது. இந்தப் பறவையின் அலகுக்கு மேலே உள்ள ‘காஸ்க்’  (Casque) என்ற கொண்டை அமைப்பு, பார்ப்பதற்கு இரண்டு வாய்கள் இருப்பதைப் போன்று தோற்றம் தரும். அதனால் இருவாய்ச்சி என்று  அழைக்கப்பட்டு அதுவே இருவாட்சி என்றாகிவிட்டது.ஒரு காலத்தில் இந்தப் பறவை இனம்  மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் முழுவதும்  பரவியிருந்தது. ஆங்கிலத்தில் இப்பறவையை ஹார்ன்பில்’ (Harnbill) என அழைப்பார்கள். ‘ஹார்ன்பில்’ என்பது ஒருவகையான மரம். இந்த மரத்தின்  பொந்துகளைத்தான் இப்பறவை கூடாகப் பயன்படுத்துகிறது. அதனால் இப்பறவைக்கு ஹார்ன்பில் என பெயர் சூட்டியுள்ளார்கள். இவை அளவில் சற்று  பெரிதானவை. இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியவை.

இப்பறவைக்கு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இனப்பெருக்க காலமாகும். இருவாட்சி பறவைகள் இணையோடு வாழக்கூடியவை.  இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேர்வு செய்யும். பெண் பறவை பொந்துக்குள்  சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்றுப் படுகைகளிலிருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக்கொண்டு கூட்டை மூடிவிடும்.  பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும்.பெண் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு  மெத்தைபோன்ற தளத்தை அமைத்து அதன்மேல் ஒன்று முதல் 3 முட்டைகள் வரை இடும். சுமார் 7 வாரம் கழித்து முட்டைகள் பொரிந்துவிடும்.  குஞ்சுகள் பொரிந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரும். அதுநாள் வரை ஆண்பறவை சிறிய துவாரம் வழியே பெண்  பறவைக்குப் பழக்கொட்டைகள், பூச்சிகளை உணவாகக் கொண்டுவந்து ஊட்டும். அனைத்துண்ணிகளான இருவாட்சிகள் பூச்சிகள் உள்ளிட்ட சிறு  விலங்குகளை உண்ணும்.

மேலும் இவற்றின் நாக்கு குட்டையாக இருப்பதால் இவற்றால் இரையை விழுங்க இயலாது. எனவே, உணவை அலகின் நுனியிலிருந்து  தூக்கிப்போட்டு சிறிது சிறிதாக அலகின் உட்பகுதிக்கு நகர்த்தும்.உலகம் முழுவதும் 54 வகைகள் இருக்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாட்சிகள் உள்ளன. தென்னிந்தியாவில் 4 வகை இருவாட்சிகள்  காணப்படுகின்றன. கேரளம் மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலங்களில் இருவாட்சிகளை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் காணப்படும் நான்கு வகை இருவாட்சிப் பறவைகள் 1. பெரும் பாத இருவாட்சி, 2. மலபார் இருவாட்சி, 3.சாம்பல் நிற இருவாட்சி, 4.  மலபார் பாத இருவாட்சி. இவை தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுபவை.இவை தவிர, மேலும் 5 வகைகள் இந்தியாவில்  உள்ளன. அவை 1. நார்கொண்டான் இருவாட்சி (அந்தமான் தீவுகளில் காணப்படுவன) 2. வளையமுள்ள இருவாட்சி, 3.ரூஃவெஸ்ட் நெக்டு இருவாட்சி,  4. பழுப்பு இருவாட்சி (வடகிழக்கு இந்தியாவில் காணப்படுவன) 5. இந்திய பாத இருவாட்சி - நேபாளம் மற்றும் இமயமலையில் காணப்படுகின்றன.



Tags : states , Iruvatci, malaipparavai, cask, insects
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்