ஏடிபி டூர் பைனல்ஸ் ஒரே பிரிவில் பெடரர், ஜோகோவிச்

லண்டன்: ஏடிபி டூர் பைனல்ஸ் தொடரின் ஜான் போர்க் பிரிவில் நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர், நோவாக் ஜோகோவிச் இடம் பெற்றுள்ளனர்.ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளின் ஆண்டு இறுதி தரவரிசைப் பட்டியலில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மற்றும் ஜோடிகள் பங்கேற்கும் ஏடிபி டூர் பைனல்ஸ் தொடர் லண்டன் ஓ2 அரங்கில் நவம்பர் 10ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கும் 8 வீரர்களும் ஆந்த்ரே அகாசி மற்றும் ஜான் போர்க் என இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதவுள்ளனர். ஆந்த்ரே அகாசி பிரிவில் ரபேல் நடால் (ஸ்பெயின், 1வது ரேங்க்), டானில் மெட்வதேவ் (ரஷ்யா, 4), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ், 6), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி, 7) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஜான் போர்க் பிரிவில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா, 2), ரோஜர் பெடரர் (சுவிஸ், 3), டொமினிக் தீம் (ஆஸ்திரியா, 5), மேட்டியோ பெரட்டினி (இத்தாலி, 8) ஆகியோர் களமிறங்குகின்றனர். தொடக்க நாளான நவ. 10ம் தேதி நடக்கும் ஒற்றையர் ஆட்டங்களில் ஜோகோவிச் - பெரட்டினி, பெடரர் - டொமினிக் தீம் மோதுகின்றனர். இது தவிர இரட்டையர் ஆட்டங்களும் நடைபெறும்.

Related Stories:

>