×

ஆழ்கடலில் மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் அதிநவீன சாட்டிலைட் போன் சோதனை

சென்னை: தமிழகத்தில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்பிற்காகவும், ஆழ்கடலில் இருப்பவர்களையும் எளிதில் தொடர்பு கொள்ள மத்திய, மாநில அரசுகளின் மானியத்தில் சாட்டிலைட் போன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சீன நாட்டை சேர்ந்த தனியார் செயற்கைக்கோள் தொலைதொடர்பு நிறுவனத்தின் சாட்டிலைட் போன்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து நேற்று சோதனை செய்யப்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் சாட்டிலைட் போன் பொருத்தப்பட்டு கடற்கரையிலிருந்து சுமார் 50 நாட்டிகல் மைல் தொலைவு வரை சென்று இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சீன நிறுவனத்தின் அதிகாரிகளும், பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் சந்தோஷம் மற்றும் அதிகாரிகளும், காசிமேட்டை சேர்ந்த மீனவர்களும் சென்றனர். இதனை பயன்படுத்திய மீனவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய சாட்டிலைட் போனை விட இந்த போன் மிக பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அகில இந்திய மீனவர் சங்க தேசிய துணை தலைவர் நாஞ்சில் ரவி கூறுகையில், “ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்காக சாட்டிலைட் போனின் சோதனை பிஎஸ்என்எல் அதிகாரிகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. சாதாரண செல்போன் டவர் கிடைக்கும் 40 நாட்டிகல் மைல் தொலைவை தாண்டி இந்த சாட்டிலைட் போனை எடுத்து சென்று சோதனை செய்தோம். இதில் கடற்கரையில் இருப்பவர்களிடம் பேசியபோது சாதாரணமாக செல்போனில் பேசியது போலவே இருந்தது. மேலும் வீடியோ கான்பிரன்சிங் வசதியும், துல்லியமான ஜிபிஎஸ் கருவியும் உள்ளது. தற்போது பயன்படுத்தும் சாட்டிலைட் போன் ஒரு வழிபாதை மட்டுமே. நாம் தகவல்களை அனுப்ப மட்டும் தான் முடியும். ஆனால் இந்த போனில் தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும்” என்றார்.

Tags : sea ,fishermen , Sophisticated satellite phone test,fishermen,deep sea
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்