×

பெரம்பூரில் 27 சவரன் கொள்ளை வழக்கில் துப்புத்துலக்க முடியாமல் போலீசார் கடும் திணறல்

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் திருவிக நகரில் ஜார்ஜ் காலனி, பாதம் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர், வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் அக்டோபர் 2ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பியபொழுது வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் இரண்டு அறைகளில் உள்ள பீரோ லாக்கர் உடைத்து அதில் இருந்த 27 சவரன் தங்க நகை மற்றும் 45 ஆயிரம் பணம், 1/2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும், பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ள மர்ம நபர்கள் பூஜை அறையில் படத்தில் இருந்த வெள்ளி பொருட்களையும் திருடி சென்றனர். இவை அனைத்தையும் சீனிவாசனின் மனைவி அலுவலகத்திற்கு பயன்படுத்தும் பேக்கில் எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து திருவிக நகர் காவல் நிலையத்தில் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் அந்த கொள்ளை தொடர்பாக சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. அதில் கொள்ளையர்கள் இரவு 12 மணி முதல் காலை 3 மணி வரை செல்வதும், மீண்டும் பேக்கில் நகைகளை வைத்து திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தன. கொள்ளை சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகியும் சிசிடிவி பதிவுகள் இருந்தும் இதுவரை கொள்ளையர்கள் யார் என்பதை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags : Perambur Police ,Perambur , Police are unable to spy , 27 shaving robbery case ,Perambur
× RELATED 15 கோடி செல்போன் கொள்ளை வழக்கு ம.பியில்...