
தாம்பரம்: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த பற்றாக்குறையினை போக்க தமுமுக நிர்வாகிகள் தாம்பரத்தில் ரத்த தான முகாம் நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் தினமும் அதிகளவில் வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே மருத்துவமனை சார்பில் தமுமுக ரத்த வங்கியில் ரத்தம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமுமுக சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் ரத்ததான முகாம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்கும் வகையில் நேற்று ரத்ததான முகாம் நடக்க இருந்தது. இதற்காக, தாம்பரம் காவல் நிலையத்தில் தமுமுக சார்பில் ரத்ததான முகாம் நடத்துவதற்கு கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் தாம்பரம் காவல் நிலைய போலீசார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரத்ததான முகாமுக்கு அனுமதி கொடுக்காமல் அவர்களது கோரிக்கையை நிராகரித்து விட்டனர். எனவே மருத்துவமனையின் முக்கியத்துவம் அறிந்த தமுமுகவினர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசியதை அடுத்து அரசு அதிகாரிகள் ரத்ததான முகாம் நடத்துவதற்கு அனுமதியளித்தனர்.
ஆனாலும் தாம்பரம் காவல் நிலைய போலீசார் ரத்ததான முகாம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு போலீசார் அங்கே வாகனத்தை நிறுத்தி ரத்தத்தை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து குறைந்த அளவிலான பொதுமக்களிடம் இருந்து ரத்தம் சேகரிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாரின் இந்த திடீர் கெடுபிடி காரணமாக ரத்தம் தானம் பெற வந்த அரசு பொதுமருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ரத்த தானம் செய்ய வந்த பொதுமக்கள் கடும் அதிருப்தியுடன் அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து தமுமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு ரத்தப் பற்றாக்குறை இருப்பதாக கூறி மருத்துவமனை சார்பில் எங்களிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் தாம்பரம் காவல் நிலைய போலீசார் இந்த அவசர ரத்ததான முகாமிற்கு அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து வந்த வாகனத்தை அப்புறப்படுத்தும்படி கூறி தகராறில் ஈடுபட்டனர். பின்னர், ஒரு கட்டத்தில் காவல்துறையினரின் எதிர்ப்பையும் மீறி ரத்ததான முகாம் நடைபெற்றது. இதுபோன்ற பொதுமக்களின் அவசிய தேவைக்கு காவல் துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்க ஒன்று’’ என்றனர்.
ரத்தம் தேவை அதிகரிப்பு
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், ‘‘ இங்கு குறைந்தது ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் வரை சிகிச்சை அளிக்க ரத்தம் சேகரித்து வைக்க இடம் உள்ளது. ஆனால் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் மக்களால் தினமும் அதிகப்படியான ரத்தம் தேவைப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் தற்போது மிகவும் குறைந்த நிலையில் ரத்தம் உள்ளது. எனவே பல்வேறு இடத்தில் பொதுமக்களிடம் ரத்தம் பெற்று பொதுமக்களுக்கு சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பல்வேறு இடங்களில் முறையாக ரத்த தானம் நடைபெறவில்லை.
குறிப்பாக தாம்பரம் பகுதியில் ரத்தம் சேகரிக்க வந்தபோது அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். நாங்கள் பொது மக்களுக்காக மட்டுமே சேவை செய்து வருகிறோம். பொதுமக்களின் உயிர் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவமானது. ஆனால், எங்கள் சேவைக்கு காவல் துறையினரே எதிர்ப்பு தெரிவிப்பது வேதனை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் ரத்தம் கொடுத்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும்’’ என்றனர்.