×

வள்ளுவர் காவியம்

பட்டையா, கொட்டையா ரகத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பாசுரம் பாடுவதில் வடகலைக்கும் தென்கலைக்கும் மோதல் வலுத்து வருகிறது. நிலைமை இப்படியிருக்க தேமே என்று வீற்றிருந்த திருவள்ளுவர் சிலைக்கு பட்டையையும் கொட்டையையும் போட்டு விட்டு சர்ச்சைக்கு வித்திட்டுள்ளனர். முதலில் இதை செய்தது பாரதிய ஜனதாவின் டிவிட்டர் பக்கத்தில்தான். வள்ளுவர் படத்துக்கு காவி உடுத்தி, கைகளிலும் நெற்றியிலும் திருநீறு பூசப்பட்டிருந்தது. அப்புறம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு அர்ஜுன் சம்பத் ருத்திராட்ச கொட்டை மாலையை போட்டு, காவியையும் போர்த்தி எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றி வந்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் காவி வள்ளுவரின் படம் அலைஅலையாக வரத்தொடங்கியது. இதற்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியது. #bjpinsultsthiruvalluvar என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது. எந்த மத வரையறைக்குள்ளும் வராத உலகப் பொதுமறையாக போற்றப்படுகிற குறளை தந்த திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசுவது எந்த விதத்தில் நியாயம் என்ற வாதமும் ஓங்கிஒலித்து வருகிறது. இதை இப்படியே விட்டால் புதன்கிழமை புதன்கிழமை அய்யன் வள்ளுவர் சிலையை 133 தடவை சுத்தி வந்து 1330 தடவை வள்ளுவேஸ்வராயநம என்று எழுதிப்போட்டு அர்ச்சனை பண்ணினால், பரீட்சைக்கு போகாமலேயே பாஸ் ஆகி விடலாம் என்ற கதைகள் எல்லாம் உலா வர ஆரம்பித்துவிடும் என சமூகவலைத்தளங்களில் இப்போதே பகீர் கிளப்பி வருகின்றனர்.

Tags : Valluvar , Valluvar ,kaaviyam
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்த...