×

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பாசுரம் பாடுவதில் வடகலை, தென்கலை மோதல்: பக்தர்கள் கடும் அதிருப்தி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், பாசுரம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு வருவதால், பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவம் நடந்தது. இதையொட்டி உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை, அலங்காரங்கள் செய்து, கோயில் வளாகத்தில் உள்ள பூதத்தாழ்வார் சன்னதியில் எழுந்தருளினார். பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவம் நடந்தபோது உற்சவ மூர்த்திகள் முன்பு பிராமணர்களில் தென்கலை பிரிவினர் பிரபந்தங்களை பாட முயன்றனர். அப்போது, வடகலை பிரிவினர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பிரபந்தங்களை பாடக்கூடாது என வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இதனால், இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது.

தகவலறிந்து விஷ்ணு காஞ்சி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் இருதரப்பினரும் 2 மணி நேரத்துக்கு மேலாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில், இருதரப்பினரும் பிரபந்தங்களை பாட வேண்டாம் என காவல்துறை, இந்து அறநிலையத் துறை, வருவாய் துறை அதிகாரிகள் கேட்டு கொண்டனர். ஆனாலும், தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போட்டிப்போட்டு இரு தரப்பினரும் பிரபந்தங்களை ஆவேசமாக பாடி சுவாமிகளை வழிபட்டனர். பூதத்தாழ்வார் சாத்துமுறை மட்டுமின்றி ஒவ்வொரு ஆழ்வார்களின் சாத்துமுறை உற்சவத்தின் போதும் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே பிரபந்தங்கள் பாடுவதில் தகராறு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு உற்சவத்தின் போதும்  இருபிரிவினர் தொடர்ந்து தகராறில் ஈடுபடுவது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

Tags : clash ,Thenkalai ,Devotees ,Kanchi Varadaraja Perumal Temple , Kanchi Varadaraja Perumal Temple, Pasuram, Vadakkalai, Thenkalai
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...