×

தமிழகத்தில் ஏற்படும் பேரிடர்களால் எந்தவொரு உயிரிழப்பும் இனி நடைபெறக்கூடாது: அரசு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நீர் நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகள் நடைபெறும் என்பது குறித்த ஒத்திகையும் செய்து காட்டப்பட்டது. பின்னர் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் இன்று (நேற்று) நடந்த விழிப்புணர்வு முகாமில், இயற்கை மற்றும் செயற்கை பேரிடர் மற்றும் விபத்துகள் நேரிடுவதை தடுப்பதற்கு, ஒவ்வொருவரும் எந்த வகையான செயலில் ஈடுபட வேண்டும், தன்னை சுற்றியுள்ள இடங்களில் ஏற்படும் ஆபத்துகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

 ஜப்பான் நாட்டில் பூகம்பம், நிலநடுக்கம்  போன்ற பேரிடர்கள் ஏற்படுவதாக செய்தி வந்தாலும் கூட உயிரிழப்பு என்பது  ஏற்படுவதில்லை, இதற்கு, அந்நாட்டு மக்களிடம் பேரிடர் குறித்த  விழிப்புணர்வே காரணம்.  அதேபோன்று, தமிழகத்தில் ஏற்படும் பேரிடர்களால் எந்தவொரு உயிரிழப்பும் இனிமேல்  நடைபெறக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மனசாட்சிக்கு தெரியும்
நிகழ்ச்சியில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, “தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஆழ்துளைய் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் போன்று இன்னொரு மரணம் ஏற்படக்கூடாது. சுஜித் மீட்பு பணியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது எங்கள் மனசாட்சிக்கு தெரியும். பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூடுவதே சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி” என்றார்.

Tags : deaths ,disasters ,Tamil Nadu ,state , Tamil Nadu, death, government
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...