×

துப்பாக்கியால் சுட்டு மாணவனை கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகரின் 2 மகன்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை: சரணடைந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

சென்னை:  துப்பாக்கியால் சுட்டு கல்லூரி மாணவனை கொலை செய்த வழக்கில், அதிமுக பிரமுகரின் 2 மகன்களை பிடிக்க போலீசார் தங்கள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் சரணடைந்த விஜய்யை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.  சென்னை தாம்பரம் அருகே வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா என்பவரின் மகன் முகேஷ்குமார் (19) என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தனது நண்பன் விஜய் என்பவருடைய வீட்டிற்கு சென்றபோது அங்கு மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, இந்த கொலை வழக்கில் முகேஷை சுட்டுக் கொன்ற விஜய் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தான். பின்னர், செங்கல்பட்டு  போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட விஜய் நேற்று மாலை 6 மணிக்கு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில், நேற்று போலீசார் விஜயின் தாய், தந்தை, சகோதரர்களை அழைத்து வந்து விசாரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த தகவல் கிடைத்ததும் அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.  மேலும், துப்பாக்கியால் சுட்ட விஜய் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவியின் நெருங்கிய உறவினர் மகன் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, ரவியை போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர். மேலும், ரவியின் இரண்டு மகன்களான அன்புராஜ் மற்றும் அன்பரசு ஆகிய இருவரது செல்போன் எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.  இதனால், சந்தேகமடைந்த போலீசார் ஏன் உங்கள் மகன்கள் இருவரது செல்போன் எண்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது, அவர்கள் எங்கே சென்றுள்ளனர் என்று கேட்டு துருவி துருவி விசாரித்தனர்.

இதனிடையே அவர்களின் சார்பில் பேசிய வழக்கறிஞர்கள் ஏற்கெனவே, அவர்களது தந்தையை கொல்ல பலரும் முயற்சித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பயந்து போய் வெளியே சென்று விட்டதாகவும், நாளை போலீஸ் முன்பு ஆஜராவதாகவும் தெரிவித்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்காத காரணத்தால் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் சரண்
மாணவன் முகேஷ்குமார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவான வாலிபர் விஜய், செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிபதி காயத்ரிதேவி முன்னிலையில் நேற்று சரணடைந்தார். அவரை வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அப்போது, விஜய் தரப்பு வழக்கறிஞர்கள், வாலிபர் விஜய்க்கு இதயத்தில் கோளாறு இருப்பதாகவும் இதனால் மருத்துவ வசதி உள்ள சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற நீதிபதி, வாலிபரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வாலிபர் விஜய், புழல்  சிறையில் அடைக்கப்பட்டான்.

துப்பாக்கி எப்படி வந்தது?
கோர்ட்டில் சரணடைந்த விஜய் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள ஒரு குப்பை கிடங்கில் இருந்து துப்பாக்கியை எடுத்தேன். அதை என் வீட்டில் வைத்திருந்தேன். அந்த துப்பாக்கியை எடுத்து கொண்டு, என் நண்பன் வீட்டுக்கு சென்றேன். அங்கு இருவரும், செல்போனில் விளையாடி கொண்டிருந்தோம்.அங்கு, நான் எடுத்து சென்ற துப்பாக்கி நிஜமானது என தெரியவந்தது. அதை வைத்து நாங்கள், மாறி மாறி சினிமாவில் வரும் காட்சிபோல் சுட்டு கொண்டோம். ஆனால், துப்பாக்கி வெடிக்கவில்லை. முகேஷ், தன்னைத்தானே நெற்றிப் பொட்டில் வைத்து சுடும்போது, வெடித்தது. அதில், முகேஷ் மயங்கி விழுந்தான். இதனால் பயந்துபோன நான், துப்பாக்கியை எடுத்து கொண்டு தப்பிவிட்டேன்.

இதற்கிடையில், தாழம்பூர் போலீசார், வாலிபர் விஜய்யை காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர். அவரை, போலீஸ் காவலில் எடுத்த பிறகு விஜய் பயன்படுத்தியது கள்ளத் துப்பாக்கியா என்ற உண்மை தெரிய வரும். மேலும் விஜய்க்கு ரவுடிகளுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா, மேலும் துப்பாக்கியை கொலைக்கு பிறகு எங்கு மறைத்து வைத்திருக்கிறார், எங்கே பதுங்கி இருந்தார் போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில் 20 வயது வாலிபரிடம் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதால். மாணவன் இருந்த பகுதியில் உள்ள வீடுகளில் வேறு யாரேனும் துப்பாக்கி வைத்திருக்கிறார்களா என்பதை கண்டறிய போலீசார் வீடு வீடாக சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால், செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை பரபரப்பு ஏற்பட்டது.

தலையெடுக்கிறதா துப்பாக்கி கலாச்சாரம்
இந்திய பிரதமர் மோடி கடந்த மாதம் 11, 12 தேதிகளில் கேளம்பாக்கம் அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சீன பிரதமரை சந்தித்து பேசினார். இதனால், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக கடந்த 10ம் தேதி தாழம்பூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இதே வேங்கடமங்கலம் கிராமத்தில் ஒரு ஒதுக்குப் புறமான பகுதியில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ஒரு துப்பாக்கி மற்றும் 2 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது, அதே பகுதியில் அதிமுக பிரமுகரின் உறவினரால் கல்லூரி மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னைக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் தொடர்ந்து கள்ளத் துப்பாக்கி நடமாட்டம் இருப்பது போலீசாருக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : squad ,sons ,AIADMK ,student ,group , Gun, kill, AIADMK leader, 2 sons
× RELATED வெஸ்ட் இண்டீசுடன் டி20 தொடர்...