பல கோடி ஆவணங்கள் சிக்கியது ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் வருமான வரி சோதனை நிறைவு

ஈரோடு: ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் கடந்த 5 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. இந்த சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியது.

ஈரோடு பெருந்துறை ரோட்டில் அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், தமிழக அரசின் பல்வேறு கட்டுமான பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகிறது.  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த நிறுவனம் கட்டுமான பணிகள் எதையும் செய்யாமல் போலியாக ரசீது கொடுத்து ஜிஎஸ்டியில் மோசடி செய்துள்ளது. இதை ஜிஎஸ்டி புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். இதில் போலி ரசீதுகளை தயாரித்து 450 கோடிக்கு மேல் மோசடி செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவன தலைவர் அசோக்குமாரை (45) ஜிஎஸ்டி புலனாய்வுத்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள அன்னை இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் நிறுவன அலுவலகம், பெருந்துறையில் உள்ள அசோக்குமாரின் வீடு ஆகியவற்றில் ஈரோடு, கோவை மாவட்டத்தை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 1ம்தேதி முதல் சோதனை நடத்தினர். இதில், பலகோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து 5 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சோதனை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு முடிந்தது. சோதனையில் கட்டுமான பணிகள் குறித்தும், அதற்கு செலவிடப்பட்ட விபரங்கள், பண பரிமாற்றம் குறித்தும் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.  இந்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே எத்தனை கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்துள்ளது என்றும், மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதும் தெரியவரும் என அதிகாரிகள் கூறினர்.

Related Stories:

>