×

திருச்சி விமான நிலையத்தில் விடிய விடிய சோதனை : 11 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

* 150 பயணிகளிடம் துருவி துருவி விசாரணை
* விமான நிலைய அதிகாரிகளிடமும் கிடுக்கிப்பிடி

திருச்சி:  துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான    நிலையத்திற்கு வந்த விமானங்களில் அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனையில்    11 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலைய    நுழைவாயிலில் இருந்த தங்கம் வாங்கும் வியாபாரிகளும் சிக்கினர். இதுதொடர்பாக   150  பயணிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் மத்திய வருவாய்   புலனாய்வு  பிரிவி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி   பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை,   துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு   வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள்  வந்து  செல்கின்றனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாகவே  தினமும்  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடும் பாதுகாப்பையும்  மீறி விமான  நிலையத்தில் உள்ள சில கருப்பு ஆடுகள் மூலம் தங்கம்  கடத்தப்படுகிறது.

இந்நிலையில்,  கோலாலம்பூரில் இருந்து நேற்றுமுன்தினம்  இரவு திருச்சி வந்த மலிண்டோ  ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின்  உடைமைகளை விமான  நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை  செய்தனர். அப்போது மதுரையை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவர் தனது   உடைமையில் மறைத்து வைத்து எடுத்து வந்த ₹1,08,000 மதிப்புள்ள  216  சிகரெட் பாக்கெட்டுகளும், 9,54,858 மதிப்புள்ள 250  கிராம் எடையுள்ள 19  ஜோடி தங்க காதணிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு 10,62,858  ஆகும். இதேபோல்  துபாயில் இருந்து நேற்றுமுன்தினம் காலை திருச்சி வந்த  ஏர் இந்தியா  விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு  பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது கேரளாவை சேர்ந்த மம்மி   அகமது குட்டி என்பவர் சூட்கேஸ் பீடிங்கில் வயர் போல் மறைத்து வைத்து இருந்த  19,59,356 மதிப்புள்ள 508 கிராம் தங்கத்தை  பறிமுதல் செய்தனர்.

திருச்சி  விமான நிலையத்தில்  நேற்றுமுன்தினம் இரவு மலேசியாவிலிருந்து வந்த 3  விமானங்கள்,  ஷார்ஜாவிலிருந்து வந்த ஒரு விமானம் என 4 விமானங்களில்  150   பயணிகளிடம் சென்னை, மதுரை, கோவையிலிருந்து வந்த 22 பேர் கொண்ட மத்திய   வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் குழு, விமான நிலைய உட்பகுதியில்   வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணை நேற்றும் தொடர்ந்தது. இதில்  அனைவரிடமிருந்தும் சிறிய சிறிய அளவில் தங்கம் பறிமுதல்   செய்யப்பட்டுள்ளது. இதுவரை ₹11 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பறிமுதல்   செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.  விசாரணையில், ‘‘விமான  நிலையத்தின் வெளியிலே வியாபாரிகள்  நிற்பார்கள். அவர்களிடம் கொடுத்தால்  கூடுதலாக பணம்  தருவார்கள். அதற்கு ஆசைப்பட்டு தான் நாங்கள் இந்த கடத்தல்  சம்பவத்தில்  ஈடுபடுகிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.  உடனே, அதிகாரிகள், விமான நிலைய வாயிலில் சோதனை நடத்தி அங்கிருந்த தங்க   வியாபாரிகள் சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சோதனையில்   எல்இடி டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்த  4 விமானங்களில் வந்தவர்களை அழைத்து செல்ல அவர்களது உறவினர்கள்  ஏராளமானோர்  ஏர்போர்ட் நுழைவாயிலில் நேற்று முன்தினம் மாலை முதலே காத்திருந்தனர்.  நேற்று  வரை பயணிகள் விடுவிக்கப்படாததால் அவர்கள்  காத்துகிடந்தனர். இதனால்  விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று  காலை மலேசியாவிலிருந்து  வந்த பயணிகள் மட்டும் விசாரணை முடிந்து ெவளியே  விடுவிக்கப்பட்டனர். திருச்சி  விமான நிலையத்தில் தங்கம் கடத்துவது  அதிகரித்து வருவதால், விமான நிலைய  அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என மத்திய வருவாய்  புலனாய்வு பிரிவினர்  அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திவருகின்றனர்.

2015ம் ஆண்டு ஏர்போர்ட்டில் சிபிஐ ரெய்டு
கடந்த 2015ல் திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து   குருவிகள்(ஏஜென்ட்கள்) மூலம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருவதாக சிபிஐக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி வந்த சிபிஐ அதிகாரிகள் குழு விமான நிலையத்தில் 2 நாள் முகாமிட்டு பயணிகளை சோதனையிட்டனர். இதில் 100க்கும்  மேற்பட்ட எல்இடி டிவிக்கள் பறிமுதல்  செய்யப்பட்டது. இதில் விமான  அதிகாரியும் உடந்தையாக இருந்த தெரியவந்தது.  இதுதொடர்பாக 10 குருவிகளுடன்,  ஏர்போர்ட் கஸ்டம்ஸ் உதவி கமிஷனர் ஒருவரும்  கைது செய்யப்பட்டார். இப்ேபாது ‘தங்க கடத்தல் தொடர்பாக சென்னை, கோவையில்  இருந்து வந்த மத்திய குழுவினர் 22  பேர் கொண்ட குழுவினர் விடிய விடிய சோதனை  நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகள் உடந்தை
தங்கம் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு வருவதற்காகவே குருவிகள்   இருக்கிறார்கள். இவர்கள் வெளிநாடு செல்லும் போது, எங்கு செல்கிறார்கள்,   எங்கு தங்குகிறார்கள், எத்தனை நாள் வெளிநாட்டில் இருப்பார்கள் என்ற   விவரங்கள் எல்லாம் இமிகிரேஷன் அதிகாரிகளிடம் இருக்கும். ஆனாலும் குருவிகள், வெளிநாடுகளுக்கு சென்று வருவது அதிகரித்தபடி உள்ளது. இமிகிரேஷன்   அதிகாரிகள் கண்டுகொள்ளாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

15 பேரிடம் மருத்துவ பரிசோதனை
பயணிகள் உடலில் வைத்து தங்கம் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டால் அந்த நபர்களை  மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்றுமுன்தினம் விடிய  விடிய நடத்திய சோதனையில் சிக்கிய 15 பேர் ஆசன வாயில் வைத்து தங்கம் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படுவதால் அவர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சுங்க அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து  அவர்களுக்கு  மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.


Tags : Trichy airport ,Trichy , Trichy Airport, Smuggling, Gold, Confiscation
× RELATED திருச்சி விமான நிலையத்தில்...