கோஷ்டி மோதல் எதிரொலி கடலூர் அதிமுக 3 மாவட்டமாக பிரிப்பு: தொழில்துறை அமைச்சர் சம்பத்துக்கு ‘செக்’

சென்னை: கடலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்டு வந்த மோதல் போக்கு, உச்சகட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதன்மூலம் தொழில்துறை அமைச்சர் சம்பத்துக்கு, செக் வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி, ஓ.பி.எஸ் தலைமைக்கு கட்சி நிர்வாகிகள் கட்டுப்பட்டு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் ஒவ்ெவாரு மாவட்டத்திலும் இருந்து வந்த கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. இந்தப்பிரச்னையில் கடலூர் அதிமுகவும் தப்பவில்லை. அங்கு கிழக்கு, மேற்கு என 2 மாவட்டங்களாக கட்சி பிரிக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளும், மேற்கில் 4 தொகுதிகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத்துக்கு எதிராக, மேற்கு மாவட்ட செயலாளரான முன்னாள் எம்பி.அருண்மொழிதேவன் தலைமையில் பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஓரணியில் திரண்டனர். அமைச்சரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நிறுத்தினர். இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் ஆதரவின்றி அமைச்சர் எம்.சி.சம்பத் செயல்பட்டு வந்தார். இந்தவிவகாரம் கட்சியின் தலைமைக்கு சென்றது.

இதையடுத்து இப்பிரச்னைக்கு முடிவுகட்டும் வகையில், கடலூர் அதிமுக மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு என செயல்பட்டு வரும் கட்சி அமைப்புகள், இன்று முதல் அமைப்பு ரீதியாக கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் மத்திய மாவட்டம், கடலூர் மேற்கு மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், கடலூர் கிழக்கு மாவட்டத்தில், பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெறுகிறது. மத்திய மாவட்டத்தில், கடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி ஆகியவை இடம்பெறுகிறது. இதேபோல் மேற்கு மாவட்டத்தில், திட்டக்குடி (தனி), விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெறுகிறது.    இதன் அடிப்படையில், கடலூர் மத்திய மாவட்டக் கழகத்தின் மாவட்டச் செயலாளராக சம்பத், (தொழில் துறை அமைச்சர்), கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக அருண்மொழிதேவன், (நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்), கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு, மாவட்டச் செயலாளராக பாண்டியன், (சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்’ எனக்கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் சம்பத் மாவட்ட செயலாளராக இருந்த கிழக்கு மாவட்டத்தில் முன்பு 5 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றிருந்தது. தற்போது அது மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது புதிதாக இடம்பெற்றுள்ள கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் பாண்டியனும், முன்னாள் எம்பி அருண்மொழிதேவனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அமைச்சர் சம்பத் கட்சி தலைமையால் டம்மியாக்கப்பட்டுள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.Tags : clash ,Cuddalore ,district ,Minister of Industry ,AIADMK 3 ,confrontation ,districts ,Czech ,Minister for Industries ,Cuddalore AIADMK , factional .confrontation.divided . 3 districts.Industries
× RELATED ஊத்துக்கோட்டை, பெரியவண்ணாங்குப்பம்...