×

தஞ்சையில் பரபரப்பு திருவள்ளுவர் சிலைக்கு காவி துணி, ருத்ராட்சத்துடன் தீபமேற்றி அர்ச்சனை: அர்ஜுன் சம்பத் உட்பட 3 பேர் கைது

தஞ்சை: தஞ்சையில் மர்மநபர்களால் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு காவி துணி போர்த்தி, ருத்ராட்ச மாலை  அணிவித்து திருநீறு பூசி தீபமேற்றி அர்ச்சனை செய்த அர்ஜுன் சம்பத் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் கடந்த 3ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்களால் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு நேற்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், காவி துணி போர்த்தி, ருத்ராட்சம்  அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தார். ஆனால் மாலை அணிவிப்பதற்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்திருந்ததால் அர்ஜுன் சம்பத், மாநில இளைஞரணி பொது செயலாளர் குருமூர்த்தி, மாநில செயலாளர் கார்த்திக்ராவ் ஆகிய 3 பேர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி: 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை வள்ளுவர் கோட்டையாக மாறும். ஆன்மிக அரசியல் மலரும். ஆன்மிக அரசியல் என்பது லஞ்ச ஊழலுக்கு எதிரானது. திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர். அதனால் காவி உடை அணிந்து அர்ச்சனை செய்தேன். திருவள்ளுவர் சிலையை அவமதித்த உண்மையான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். திருவள்ளுவர் சிலைக்கு திருநீறு பூசி, ருத்ராட்சம் மற்றும் காவி உடை அணிவித்தது சரிதான் என்று கூறினார்.

Tags : arrest ,Arjun Sampath , asylum, Arjun Sampath, arrest,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!