×

தமிழக மத்திய சிறைகளில் தாராளமாக புழக்கம் 4ஜி நெட்வொர்க்கை தடை செய்யாத ஜாமர்கள்

* செல்போன் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி எப்போது ? * கைதிகளுக்கு உதவும் கருப்பு ஆடுகள்

வேலூர்: தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் தற்போதுள்ள ஜாமர் கருவிகளால் சிறைக்குள் 4ஜி செல்போன் பயன்பாட்டை தடை செய்ய இயலவில்லை என்று புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உட்பட மொத்தம் 138 சிறைச்சாலைகள் உள்ளன. இதில் 22 ஆயிரத்து 792 கைதிகளை அடைக்கலாம். தற்போதைய நிலையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். செல்போன், கஞ்சா உட்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கிறது.தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு என குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இக்குற்றச்சம்பவங்களில் பெரும்பாலானவற்றை சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளே திட்டம் வகுத்து கொடுத்து, அவர்களது கூட்டாளிகளால் நடத்தப்படுவதாக காவல்துறையே ஒப்புக்கொள்கிறது. இதற்கு சிறைச்சாலைகளில் செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து சிறைச்சாலைகளில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலில் செல்போனும் இடம்பிடித்தது. செல்ேபான்கள் மூலம் தகவல் பரிமாற்றத்தை தடுக்க சில ஆண்டுகளுக்கு முன்பு ₹5 கோடி மதிப்பீட்டில் சிறைச்சாலைகளில் செல்போன் செயல்பாடுகளை செயலிழக்க செய்யும் ஜாமர்கருவிகள் அமைக்கப்பட்டு 2017 முதல் பயன்பாட்டிற்கு வந்தன. ஆனாலும், சிறைகளில் செல்போன் பயன்பாடு தொடர்கிறது.

சிறைத்துறையை சேர்ந்தவர்களே  கைதிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை  செய்யப்பட்ட பொருட்களை சப்ளை செய்வதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிறைக் காவலர்கள் சிலரும்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து மேலிட அதிகாரிகள் உத்தரவின் பேரில் சிறைகளில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்படுகிறது. ஆனாலும் செல்போன் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் சிறைத்துறை தவித்து வருகிறது. அதற்கேற்ப கடந்த ஆண்டு புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து புழல் சிறையில் சோதனை நடத்தப்பட்டு, டிவி, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 17 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் மற்ற சிறைகளில் அதிரடி சோதனைகள் அவ்வபோது நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு வேலூர் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அறையில் இருந்து ஸ்மார்ட் செல்போன், சிம்கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள ஜாமர்கருவிகளின் செயல்பாடுகளின் தன்மை குறித்த கேள்வி எழுப்பியது.

இதுதொடர்பாக சிறைத்துறை நடத்திய விசாரணையில்தான் சிறைகளில் 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஜாமர்கருவிகள் 2ஜி மற்றும் 3ஜி சிக்னல்களை மட்டும் தடுக்கும். இப்போதைய 4ஜி செல்போன் செயல்பாட்டை தடுக்கும் திறன் அற்றவை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இப்போதுள்ள கருவிகள் மூலம் சுமார் 200 சதுர மீட்டர் தூரத்துக்கே 2ஜி மற்றும் 3ஜி செல்போன் உரையாடலை தடுக்க முடியும். இப்போதைய 4ஜி  செல்போன்களின் திறனை தடுக்க முடியாது. மேலும் கைதிகளுக்கு உதவும் சில காவலர்கள் செல்போன் கொடுத்து, ஜாமர் கருவி செயல்படாத பகுதியில் இருந்து ெசல்போனில் பேசி குற்றச் செயல்களில் அவர்களை ஈடுபட செய்கின்றனர். சிறையில் சோதனை நடத்தும் போது, பழுதான பழைய செல்போன்கள் மட்டுமே எங்களிடம் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட் செல்போன்கள் கிடைப்பதில்லை. எனவே சிறைத்துறையில் கருப்பு ஆடுகளையும் அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த வேலை தற்போது நடந்து வருகிறது’ என்றனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது, ‘தற்போது சிறைகளில் உள்ள பழைய ஜாமர் கருவிகள் 4ஜி நெட்வொர்க்கை தடை செய்யாது. எனவே, நவீன  ஜாமர் கருவிகளை பொருத்தினால் மட்டுமே 4ஜி நெட்வொர்க்கை தடை செய்ய முடியும்’ என்றனர்.
 சிறைகளில் இருந்தே வெளியில் குற்றச்சம்பவங்களை அரங்கேற்றுவதை தடுக்கவும், கைதிகளிடையே தகவல் தொடர்பை துண்டிக்கவும், அவர்களை கண்காணிக்கவும் மேம்படுத்தப்பட்ட ஜாமர் கருவிகளை சிறைகளில் அமைப்பதுடன், நவீன கண்காணிப்பு சாதனங்களையும் இப்போதைய சூழலுக்கு ஏற்ப அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

கைதிகள் தப்புவதில் 2ம் இடம்
சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி செல்லும் சம்பவங்களில் குஜராத் மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடும், உத்தரபிரதேச மாநிலமும் 2 இடத்தையும் பிடிக்கின்றன.

தமிழக சிறை கட்டமைப்பு
தமிழக சிறைகளில் 22 ஆயிரத்து 792 கைதிகளை அடைக்கும் இடவசதி உள்ளது. தற்போது 13 ஆயிரத்து 999 கைதிகள் உள்ளனர். 601 பெண் கைதிகள், 112 வெளிநாட்டு கைதிகள் உள்ளனர். இவர்களில் தூக்குத்தண்டனை கைதிகள் 6 பேர், ஆயுள் தண்டனை கைதிகள் 2 ஆயிரத்து 495 பேர். நாட்டிலேயே தமிழக சிறைகள்தான் குறைந்த அளவிலான கைதிகளை கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

Tags : jails ,Tamil Nadu , Liberation , Tamil Nadu ,Central Prison, 4G network
× RELATED தாயக விடுதலைக்காக தன் குடும்பம்,...