×

பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் அமைக்க மத்திய அரசு நிதியை நிராகரித்த தமிழக அரசு: 3 ஆண்டாக ஒரு ரூபாய் கூட கேட்காத அவலம்

சிறப்பு செய்தி
பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கும் நிதியை பெற தமிழக அரசு 3 ஆண்டுகளாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசில் இருந்து பெறப்படும் நிதி பெறப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் தங்களின் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து பல்வேறு நகரங்களில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் மேன்சன்கள் எனப்படும் தனியார் விடுதிகளில்தான் தங்குகின்றனர். ஒரு சிலர் மட்டுமே வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் பெண்கள் தங்கும் தனியார் விடுதிகளில் பெரும்பாலான விடுதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.  கடந்த  ஆண்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியின் பெண்கள் வசிக்கும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து விடுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது சென்னையில் உள்ள பல்வேறு விடுதிகள் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பெண்கள் விடுதிகளும் முறையாக அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. இதன்படி விடுதி நடத்துவோர் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பதிவு சான்று மற்றும் உரிமம் பெற வேண்டும். பெண்கள் விடுதியில் பெண் காப்பாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். காவல்துறையின் நன்னடத்தை சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். உரிய வருகைப்பதிவேடு பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மேலும் உரிமம் பெறாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அரசு அனுமதி பெற்ற தனியார் விடுதிகளில் மட்டுமே பெண்கள் தங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை போன்ற பெருநகரங்களில் அரசு பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதியை அதிக எண்ணிக்கையில் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். தமிழக அரசு சார்பில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 28 விடுதிகள்  தற்போது நடத்தப்பட்டுவருகிறது. சென்னையில் மாத ஊதியம் ரூ. 25 ஆயிரத்துக்குள்ளும், இதர மாவட்டங்களில் மாத ஊதியம் ரூ. 15 ஆயிரத்துக்குள்ளும் பணிபுரியும் பெண்கள் இந்த விடுதிகளில் சேர்ந்து பயன்பெறலாம்.  சென்னையில்  மாதமொன்றுக்கு ரூ.300ம், இதர மாவட்டங்களில் மாதமொன்றுக்கு  ரூ.200ம் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் பணிபுரியும் பெண்களுக்கான புதிய விடுதிகள் கட்ட மத்திய அரசு வழங்கும் நிதி உதவியை பெற கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு எந்த வித நடவடிக்கை எடுக்கவில்ைல என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்க மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது. மாநில அரசின் கீழ் செயல்படும் பெண்கள் மேம்பாட்டு நிறுவனம், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், மகளிர்  சுய உதவி குழுக்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.

இதன்படி விடுதி அமைப்பதற்கான மொத்த தொகையில் 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும். மாநில அரசு 15 சதவீத நிதியையும், திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் 25 சதவீத நிதியையும் செலவு செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தின்படி மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2016 - 2017 நிதியாண்டில் 7 மாநிலங்கள் நிதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன. இதில் 2 மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. 2017 - 2018ம் நிதியாண்டில் 4 மாநிலங்கள் நிதி கோரி விண்ணப்பித்துள்ளன.  இந்த 4 மாநிலங்களுக்கு மத்திய நிதி வழங்கியுள்ளது. 2018 - 2019ம் நிதியாண்டில் 4 மாநிலங்கள் நிதி கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இதில் 2 மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த 3 ஆண்டுகளில் பணிபுரியும் பெண்களுக்கான மகளிர் விடுதி அமைக்க  அமைக்க நிதி அளிக்ககோரி மத்திய அரசிடம் தமிழக அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. தனியார் விடுதிகளில் பெண்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழக அரசு இந்த செயல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ள சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுவரை மத்திய அரசு வழங்கிய நிதி
2017 முதல் 2019 வரை (லட்சங்களில்)
மகாராஷ்டிரா        202.4
அருணாச்சல பிரதேசம்    193.47
அசாம்             8.83
குஜராத்            183.76
இமாச்சல பிரதேசம்         265.83
கர்நாடகா            973.66
மத்திய பிரதேசம்        244.03
மணிப்பூர்            991
தெலங்கானா        115.01
மிசோரம்            170.62


செயல்படுமா மகளிர் விடுதிகள் நிறுவனம்?
பணிக்காக நகர்புறங்களில் தங்கும் பெண்களுக்கு பாதுகாப்புடன் கூடிய மகிழ்ச்சியான தங்கும் விடுதிகளை ஏற்படுத்தி தர தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சிறப்பு திட்ட சாதனமாக கடந்த நிதியாண்டில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிறுவனம் மூலம் மத்திய அரசுக்கு விண்ணப்பித்து அதிக அளவில் விடுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : government ,Tamil Nadu ,hotel ,A Rs ,hostels , Women, Hotels, Central Government Funds, Government of Tamil Nadu
× RELATED மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்