×

‘மேடம் வண்டி மாறி போச்சு.. கீழே இறங்குங்க..’ ஓடுபாதையில் விமானத்தை நிறுத்தி பெண் பயணியை இறக்கிவிட்ட பரிதாபம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கீதா தேவநாத் (56). இவர், நேற்று காலை டெல்லியில் இருந்து ஏர் இண்டியா விமானத்தில் பிற்பகல் 1.5 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். இவர், ஏர் இண்டியா விமானத்தில்  டெல்லியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து பெங்களூருக்கும் செல்ல ஒரே டிக்கெட் எடுத்திருந்தார். அந்த விமானம் சென்னையில் இருந்து 1.45 மணிக்கு பெங்களூரு புறப்படும். அதேபோல், கீதா தேவநாத் டெல்லியில் இருந்து சென்னை வந்த ஏர் இண்டியா விமானம் சென்னையிலிருந்து கோவைக்கு 1.45 மணிக்கு புறப்படும். ஆனால், கீதா  தேவநாத், அது கோவை செல்லும் விமானம் என்பது தெரியாமல் தான் பெங்களூரு செல்வதாக நினைத்து விமானத்தில் இருந்து கீழே இறங்காமல் அப்படிேய அமர்ந்து விட்டார்.
விமானம் 1.45 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஓடுபாதையில் ஓடிக் கொண்டிருந்தது. அப்போதுதான் விமான பணிப்பெண்கள் பயணிகளின் எண்ணிக்கையை சரிபார்த்தபோது கூடுதலாக ஒரு பயணி இருப்பது தெரியவந்தது. எனவே, விமானத்தில் இருந்த பயணிகளின் டிக்கெட்களை பரிசோதித்தனர். அப்போது கீதா தேவநாத்,  பெங்களூரு டிக்கெட்டில் கோவை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தது தெரியவந்தது, உடனே, பணிப்பெண்கள், ‘‘நீங்கள் ஏன் சென்னையில் கீழே இறங்கவில்லை. இந்த விமானம் கோவை அல்லவா செல்கிறது’’ என்றனர். இதை கேட்டு கீதா தேவநாத் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். விமானி  ஓடு பாதையிலேயே அவசர அவசரமாக விமானத்தை நிறுத்திவிட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பின்பு அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து இழுவை வண்டி மூலமாக பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பின்பு பெண் பயணி கீதா தேவநாத் விமனத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார். இதற்கிடையே பெங்களூரு செல்ல வேண்டிய ஏர் இண்டியா விமானம், பயணி கீதா தேவநாத்திற்காக அரை மணி நேரம் நிறுத்தப்பட்டு, தாமதமாக பிற்பகல் 2.18 மணிக்கு பெங்களூரு புறப்பட்டுச் சென்றுவிட்டது. கீழே இறக்கி விடப்பட்ட கீதா தேவநாத், ஏர் இண்டியா கவுண்டருக்கு வந்து கேட்டபோது. உங்களுக்காக விமானம் காத்திருந்து புறப்பட்டுச் சென்று விட்டது என்றனர். இதனால் பாதிக்கப்பட்ட கீதா தேவநாத், கடுமையான வாக்குவாதத்தில்  ஈடுபட்டார். விமான நிலையத்தில் இருந்த சக பயணிகளும் அவருக்கு ஆதரவாக அதிகாரிகளுடன் ஏர் இண்டியா கவுண்டரில் சண்டை போட்டனர். ஒரு பயணி தவறாக ஏறியிருந்தால் அதுகுறித்து விசாரிக்க மாட்டீர்களா என்று கேட்டனர். அதன்  பின்பு இனிமேல் ஏர் இண்டியா விமானம் நாளை (இன்று) காலை தான். எனவே வேறு தனியார் விமானத்தில் ஏற்றி அனுப்புவதாக கூறினர்.  அதன்படி நேற்று மாலை 5.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் விமானத்தில் கீதா தேவநாத் அனுப்பி வைக்கப்பட்டார். கீதா தேவநாத்துக்காக ஓடு பாதையில் இருந்து திரும்பி வந்த ஏர் இண்டியா விமானம் தாமதமாக 3.05 மணிக்கு  புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


Tags : Madam ,Chennai Airport , Madam cart ,runway, Chennai airport
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்