×

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம் வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் முறையீடு செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையருக்கு, டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரை டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.  திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோருக்கு எழுதியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான கிரிமினல் வழக்கை நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட வேண்டும். அல்லது புதிய புகார்  மனுவினை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்.  தமிழகத்தில் 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கு, வருமான வரித்துறை சோதனை மூலம் உரிய ஆதாரங்கள் இருந்தும் தொடர்ந்து நடத்தப்படாமல் கைவிடப்பட்டதால் மக்கள்  தேர்தல் ஆணையத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தலையிட்டு அந்த வழக்கை முறையாக விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  முதன்மையான எதிர்க்கட்சியாகிய நாங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்படாத் தன்மையால் மேலே குறிப்பிடப்பட்ட படி பிரச்சினையில் தங்களை அடிக்கடி அணுக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பது எங்களுக்கு ஆழ்ந்த வேதனை  அளிக்கிறது.
 அந்த அறிக்கையில் வாக்காளர்களுக்கு யார் யார் லஞ்சம் கொடுத்தார்கள் என்று அவர்களுடைய பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அந்த ஆவணங்களில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்பட அவருடைய  அமைச்சரவைச் சகாக்கள் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதுவே மாநிலக் காவல் துறை புகார் மனுவை பதிவு செய்யவும் அவர்களுக்கு எதிராக புலனாய்வு செய்யவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  பொதுமக்களின் உறுதியும், நம்பிக்கையும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீது உள்ளது. தவறும் செய்யும் அதிகாரிகளை கடுமையாகத் தண்டிப்பதற்கு தவறினால் அதன் மூலம் அவர்களால் செய்யப்பட்ட  கடுமையான முறைகேடுகளுக்கு நிவாரணம் காணாவிட்டால், அது நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் ஒரு இருண்ட நாளாக இருக்கும். அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவும் இருக்கும். இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த  நிலைமையின் தீவிரத் தன்மையை உணர்ந்து இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர்கள் மாநாட்டில் இந்தி
தேசிய தலைமை ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு மாநாட்டில் மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை கண்டித்து மத்திய மனித வளத்துறை அமைச்சருக்கு திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:வரும் 2020 ஜனவரி 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை டெல்லியில் நடைபெறவிருக்கும் தேசிய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான மாநாட்டில் மாநில மொழிகளைப் பயன்படுத்துவதற்கு  தடை விதித்து இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

தமிழ் போன்ற பிற இந்திய மொழிகளைஅறிந்துள்ள ஆசிரியர்கள் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளும் உரிமை பறிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை நாட்டின் கூட்டாட்சி முறையின் அமைப்புக்கு எதிரானது. தமிழ் போன்ற பிற இந்திய  மொழிகளை அறிந்த ஆசிரியர்களுக்கும் இத்தகைய தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.எனவே, சம்பந்தப்பட்ட தேசிய மாநாட்டினை நடத்தும் தங்கள் மனிதவளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாளர்களுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து 2020 ஜனவரியில் நடைபெறும் இந்த தேசிய மாநாட்டில் தமிழ் உள்ளிட்ட  இந்திய மொழிகளைப் பேசுவோரையும் கலந்துகொள்ள அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Court ,cancellation ,Baloo ,RK Nagar , RK Nagar ,by-election,Cancellation , DR Baloo
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...