×

விருப்ப ஓய்வு திட்டத்துக்கு தகுதி படைத்த 1 லட்சம் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு கல்தா?: சம்பள சுமையை குறைக்க வருது அதிரடி ‘மெகா பேக்கேஜூடன்’ கவர்ச்சி அறிவிப்பு

புதுடெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள ஒரு லட்சம் பேரை விருப்ப ஓய்வு திட்டத்தில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கவர்ச்சிகர பேக்கேஜ்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள், நிதிச்சிக்கல், தனியார் தொலைத்தொடர்பு துறையினரின் போட்டியால் தள்ளாடி வருகின்றன. வருவாயில் பெரும்பகுதி சம்பளத்துக்கே சென்று  விடுவதால், இந்த நிறுவனத்தில் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை விருப்ப ஓய்வூதிய திட்டம் மூலம் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனங்களை மீட்க ₹74,000 கோடி நிதி உதவியை தொலைத்தொடர்பு துறை கோரியிருந்தது. ஆனால், இதை நிதியமைச்சகம் ஏற்கவில்லை. பிஎஸ்என்எல்லில் 1.76 லட்சம் ஊழியர்கள் எம்டிஎன்எல்லில் 22,000 ஊழியர்கள் உள்ளனர்.  ஊழியர்கள் சம்பளத்தையே தாமதமாக போடும் அளவுக்கு இவற்றின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் மொத்த கடன் சுமை சுமார் 40,000 கோடி என கூறப்படுகிறது.

 இந்த நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி வழங்க மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதோடு, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 50 வயதுக்கு  மேற்பட்டவர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் வீட்டு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.   இந்நிலையில், சம்பள சுமையை குறைக்கும் வகையில் முதல் கட்ட நடவடிக்கையாக விருப்ப ஓய்வு  திட்டத்தை (விஆர்எஸ்) பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.  இந்த திட்டத்தை சுமார் 80,000 பேர் ஏற்பார்கள் எனவும், இதன்மூலம் சம்பள பில் 7,000 கோடி மிச்சமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பிஎஸ்என்எல்  தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே.பர்வார் கூறியதாவது:
 பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி தொடங்கிய இந்த திட்டம் அடுத்த மாதம் 3ம் தேதி வரை இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விருப்பம் உள்ள ஊழியர்கள் விஆர்எஸ் கோரி  விண்ணப்பிக்கலாம். இது அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த விஆர்எஸ் திட்டமாகும். இந்த திட்டத்தில் ஓய்வு பெற சுமார் 70,000 முதல் 80,000 பேர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் சம்பள பில் சுமார் 7,000 கோடி மிச்சமாகும் என்றார்.

 இருப்பினும்,  மொத்தம் உள்ள ஊழியர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் விஆர்எஸ் பெறுவதற்கு தகுதியானவர்கள் என பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிஎஸ்என்எல் விஆர்எஸ் - 2019 என்ற இந்த திட்டத்தின்படி, 50 வயதுக்கு  மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள், இங்கிருந்து பிற நிறுவன அயல் பணிக்கு சென்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  தகுதி உடையவர்களுக்கு, ஆண்டுக்கு 35 நாள் சம்பளம் என பணியாற்றிய மொத்த ஆண்டுகளுக்கு கணக்கிட்டு  கருணைத்தொகை வழங்கப்படும். இதுதவிர, ஓய்வு வயது வரை ஆண்டுக்கு 25 நாள் சம்பளம் வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். இதுபோல, எம்டிஎன்எல் நிறுவனமும் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி  அன்று 50 வயது பூர்த்தியடையும் ஊழியர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனத்தை மீட்டெடுக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில், 4ஜி அலைக்கற்றை வாங்க ₹20,140 கோடி, அதற்கான ஜிஎஸ்டி செலுத்த 3,674 கோடி, விஆர்எஸ் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்க  12,768 கோடி அடங்கும்.



Tags : BSNL , Eligible , BSNL ,employees , mega packaging
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...