×

குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதற்காக வரும் 14ம் தேதி இரவு செல்போனை ஒரு மணி நேரம் ‘சுவிட்ச் ஆப்’ செய்யுங்க: பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்

சேலம்: குழந்தைகள் தினமான வரும் 14ம் தேதி இரவு, பெற்றோர் ஒரு மணி நேரம் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து, பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாறிவரும் நவீன காலத்தில் மக்களின் வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உறவினர்களுடனான உரையாடல் குறைந்து வருகிறது. குறிப்பாக, பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் கூட நேரத்தை செலவிட வாய்ப்பில்லாமல்  போகிறது. வீட்டில் இருக்கும் ஒருசில மணி நேரத்திலும், செல்போனில் மூழ்கி விடுகின்றனர். இதனால் பெற்றோருடனான  குழந்தைகளின் நெருக்கமும் குறைந்து வருகிறது. இவற்றை உணர்த்தும் வகையிலும், பெற்ற தங்களது  குழந்தைகளுடன் உரையாட வாய்ப்பு ஏற்படுத்தும் வகையிலும், வரும் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று, பெற்றோர்கள் தங்களது செல்போனை ஒருமணி நேரம் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ‘மீண்டும் இணைவதற்காக துண்டித்து வையுங்கள்’ என்ற பிரசாரம்  முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெற்றோர், வரும் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று இரவு 7.30 மணிமுதல் 8.30 மணி வரை தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அந்த நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுங்கள். இந்த  நடவடிக்கையை அன்று மட்டுமில்லாமல், வாரம் அல்லது மாதந்தோறும் என முடிவெடுத்து தொடர வேண்டும். அந்தந்த மாவட்ட முதன் மை கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளிகளுக்கும் மேற்கண்ட அறிவிப்பை தெரிவித்து, குழந்தைகள்  மூலம் பெற்றோருக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : children ,parents , children, Cell phone ,switch switch ,Parental school, request
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...