சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம்: 500 கோடிக்கு வருவாய் இழப்பு: 75 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. இந்த துறைமுகத்தில் இருந்து தொழில் செய்து வரும் மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி இல்லை. தினமும் காலை புறப்பட்டு சென்று மீன்பிடித்துவிட்டு மாலையில் கரை திரும்ப வேண்டும். இதனால் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் நீண்ட தூரம் செல்லாமல் குறைந்த தொலைவிலேயே மீன்பிடிக்கின்றனர். இதனால் நாட்டு படகு மீனவர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்படுகிறது. அதோடு நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சேதமடைந்தும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதையடுத்து நாட்டுப்படகு மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக பக்கத்து மாவட்ட நாட்டு படகு மீனவர்களுக்கும், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. கடந்த மாதம் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட படகுகளில் வந்து சின்னமுட்டம் துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதன் பிறகு சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த சின்னமுட்டம் விசைப்படகுகள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதித்தால் தான் நாட்டு படகு மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தொழில் செய்ய முடியும். அதோடு விசைப்படகுகளுக்கும் போதிய வருவாய் கிடைக்கும். எனவே தங்கி மீன்பிடிக்க அனுமதிக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என கூறினர். போராட்டம் தொடங்கி 45 நாட்களான பின்னரும் இதுவரை அவர்களின் கோரிக்கை நிறைேவற்றப்படவில்லை. தற்போது, மத்திய அரசுக்கு அதிகப்படியான அன்னிய செலாவணியை ஈட்டி தருவது மீன்பிடி தொழில். ஒரு விசைப்படகு மீன்பிடிக்க சென்றால் சுமார் 1000 லிட்டருக்கு மேல் டீசல் செலவாகும். இவ்வாறு இங்குள்ள 350 விசைப்படகுகளும் மீன்பிடிக்க சென்றால் சுமார் 3.5 லட்சம் லிட்டர் டீசல் விற்பனையாகும்.

இதன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் மின்பிடி தடைபட்டுள்ளதால் கோழி தீவன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மீன் எண்ணெய் தயாரித்தல் மற்றும் மீன் உப பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மீன்பிடி தொழில் நடக்காததால் இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நேரடியாக சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். மீன் பிரியர்களுக்கும் உரிய விலையில் மீன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது சாதாரண மீனவர்கள் பிரச்னை என அலட்சியம் செய்யாமல் நாட்டின் அன்னிய செலாவணி மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என மீனவர் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>