கன்னியாகுமரியில் மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ வகை நண்டு: மீன் கண்காட்சியகத்தில் ஒப்படைப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி வாவத்துறையை சேர்ந்த மீனவர் சாஜூ (29). தனக்கு சொந்தமான நாட்டுப்படகில் கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பினார். பின்னர் வலையில் இருந்த மீன்களை எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் அபூர்வ வகை நண்டு சிக்கியிருந்ததை பார்த்தார். தினமும் வலையில் ஏராளமான நண்டுகள் கிடைக்கும் என்றாலும் இது பார்ப்பதற்கு புதுவகையாக இருந்ததால் அதனைகன்னியாகுமரி காமராஜர் மண்டபம் அருகேயுள்ள அக்வா மீன் கண்காட்சி கூடத்தில் ஒப்படைத்தார். இக்கண்காட்சி கூடத்தில் ஏற்கனவே 135 வகையான மீன் மற்றும் நண்டு இனங்கள் உள்ளதாக அதன் உரிமையாளர் ஜெபர்சன் தெரிவித்தார். ‘ரெட் ஃபிராக் கிராப்’ என அழைக்கப்படும் இந்த நண்டு குயின்ஸ்லாந்தின் யெப்பூன் முதல் நியூ சவுத் வேல்ஸின் வடக்கு கடற்கரை வரையிலும், ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையின் கரையோர நீர்ப்பரப்பிலும் வாழ்கின்றன. இதுதவிர பிலிப்பைன்ஸின் தென்மேற்கு மிண்டானாவோவின் கடலோர நீரில் இவை ஏராளமாக உள்ளன. மேலும் இந்த நண்டுகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலும், இந்திய பெருங்கடல் முழுவதும் இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஹவாய் மற்றும் வியட்நாம் வரையிலும் காணப்படுகின்றன. இதன் அறிவியல் பெயர் ரணினா ரனினா ஆகும்.

இது 150 மி.மீ (5.9 அங்குலம்) வரை வளரக்கூடும். 900 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும் இவை பகல் நேரத்தில் மண்ணுக்குள் புதைந்தும், இரவு நேரத்தில் கரைப்பகுதியில் நடமாடும். இது குறித்து விசாகப்பட்டினம் மத்திய மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி லவ்சன் கூறியது: அரியவகை நண்டு இனமான இது அண்மையில் தமிழகத்தில் பாம்பன் பகுதியிலும், கேரள மாநிலம் விழிஞ்ஞத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் கிடைத்துள்ளது என்பதால் இவ்வகை இனங்கள் தமிழக கடல் பகுதியில் அதிகமாக வசிக்கின்றன என நினைக்கிறேன் என்றார்.


Tags : fisherman ,Fish Exhibition , Handicraft, Trapped, Rare Crab, Fish Exhibition
× RELATED கடலில் மூழ்கி மீனவர் சாவு