×

மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம்: முதல்வர் பட்னாவிஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சிவசேனா அமைச்சர்கள்

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 105 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி  பெற்றன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால், இரு கட்சிகளுக்கும்  தலா இரண்டரை ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை  சிவசேனா பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை ஏற்க பாஜ மறுப்பதால் புதிய  அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது.
மறுபுறம், சிவசேனாவின் ஆதரவு இல்லாமலேயே தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் சிறுபான்மை அரசாக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை பாஜ செய்து வருகிறது.

இதற்கிடையே, நேற்றுக் காலை டெல்லி சென்ற முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், பாஜ தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, எக்காரணம் கொண்டு முதல்வர்  பதவியையும், உள்துறை அமைச்சர்  பதவியையும் சிவசேனாவுக்கு விட்டுக் கொடுப்பதில்லை என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை நேற்று இரவு  முதல்வர்  தேவேந்திர பட்நவிஸ் சந்தித்துப்  பேசியுள்ளார்.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது; மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்த்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்காது. பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவும் சிவசேனாவும் இணைந்து விரைவில் அரசை அமைக்க வேண்டும். இதுதான் ஒரே வழி. எதிர்க்கட்சியாக  நாங்கள் பங்குவகிப்போம். ஜனாதிபதி ஆட்சியை தவிர்ப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று என்னை சந்தித்தபோது, விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் குறித்து பேசினோம்  எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசியல் நிலவும் அசாதாரண நிலை குறித்து முதல்வர் பட்னாவிஸ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் சிந்தே, ராம்தாஸ் கடாம்  உள்ளிட்ட 6 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

ஏக்நாத் சிந்தே:  

கடந்த 2004 முதல் எம்.எல்.ஏ.,வாக இருந்து  வரும் ஏக்நாத், தானே மாவட்டத்தில் தனி செல்வாக்கு படைத்தவராக திகழ்கிறார். முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உடன் நெருக்கமாக இருப்பதால், அவரது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை  அமைச்சராகவும் இருந்துள்ளார். இதனால்,  ஏக்நாத்துக்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தானே மாவட்ட எம்.எல்.ஏ.,வான ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா தரப்பில் முதல்வராக்க வேண்டும் என ஒரு தரப்பினர்  போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது,  ஆட்சியமைக்க ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மத்தியில் சிவசேனா தலைமைக்கு புது தலைவலியாக உருவாகியுள்ளது. மேலும், இதில் நல்ல முடிவு எடுக்கவில்லை எனில், அவர் பாஜக-வில் சேர உள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.


Tags : ministers ,Patnavis ,Shiv Sena ,meeting ,Maharashtra , Shiv Sena ministers present in Maharashtra politics
× RELATED கொரோனா காலத்தில் மருத்துவமனையிடம்...