×

ஸ்ரீரங்கம் கோவில், நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் கைது

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரும், அதே கோவிலில் ஆயிரத்து 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குத்து விளக்கை மாற்றி வெள்ளி விளக்கு வைக்க முயற்சி நடப்பதாக புகார் தெரிவித்தவருமான  ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், கோவில் நிர்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பழங்கால சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டதாக புகார் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிவித்து இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தமிழக டிஜிபி மீது ரங்கராஜன் நரசிம்மன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் ரங்கராஜன் நரசிம்மன் சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாற்றப்பட்டுள்ளதாக தொடர்ந்த வழக்கில் தொழில் அதிபர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதம் ஸ்ரீரங்கம் கோயில் மூலஸ்தானத்தில் ஆயிரத்து 100 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த குத்துவிளக்கை மாற்றி வெள்ளி விளக்கு வைக்க முயற்சி நடப்பதாக ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்த புகாரிலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உண்மை இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.

இந்நிலையில் தற்போது கோவில் குறித்தும் நிர்வாகிகள் குறித்தும் வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கோவில் இணை ஆணையர் ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் ரங்கராஜன் நரசிம்மனை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தீண்டாமை புகாரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய முயற்சி நடந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் பெற்றிருந்தார். இந்த நிலையில், தற்போது ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகி கொடுத்த புகாரில் வழக்கில் கைது செய்யப்பட்டது ஆன்மீக வாதிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

Tags : Rangarajan Narasimman ,Srirangam Temple ,administrators ,Sreerangam temple , Rangarajan Narasimman, Sreerangam temple, administrators
× RELATED வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும்...