×

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜு, காமராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.100க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் சில்லறை விற்பனை கடைகளில் அதிகபட்சமாக சின்ன வெங்காயம் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம் விளையும் மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக கோயம்பேடு போன்ற சந்தைகளுக்கு வெங்காயத்தின் வரத்து குறைவாக உள்ளது. ஒரு நாளுக்கு 80 லாரிகளில் வரக்கூடிய வெங்காயம், தற்போது 40 லாரிகளில் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

இதன்காரணமாக வெங்காயத்தின் விலை அதிகமடைந்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், சின்ன வெங்காய சாகுபடி பாதிப்படைந்துள்ளது. மறுபுறம், இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் தான் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாசிக்கில் உள்ள லசல்கான் என்ற இடத்தில் மிகப்பெரிய வெங்காய சந்தை உள்ளது. இந்த நிலையில், வெங்காய விலை உயர்வுக்கு வடமாநிலங்களில் பெய்த கடும் மழை தான் காரணம் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெங்காயம் அழுகிவிட்டது. அறுவடை செய்த வெங்காயத்தையும் உரிய முறையில் சேமித்து வைக்க முடியவில்லை. இதனால் மார்க்கெட்டுக்கு வெங்காயம் வருவது குறைந்துவிட்டது.

இந்நிலையில், வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் வகையில், துருக்கி, ஈரான், எகிப்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் உணவுதுறை அமைச்சர் காமராஜ் ஆகிய இருவரும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வெங்காயத்தை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக சில்லறை விற்பனையகத்தில் வெங்காயத்தை இருப்பில் வைத்துக் கொள்ளக்கூடாது. மொத்த விற்பனை கடைகளில் 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக வெங்காயத்தை வைத்துக்கொள்ளக்கூடாது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக, வெங்காய விலை உயர்வை தடுப்பது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனைக்கு பிறகு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரத்து குறையும் போது வெங்காய விலை உயரும்; ஆனால் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறியுள்ளார்.


Tags : Ministers ,Selur Raju ,Kamaraj , Onion Prices, Tamil Nadu, Ministers, Cellur Raju, Kamaraj, Consultancy, Chennai
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...