×

டெல்லி காற்று மாசுபாட்டிற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா காரணமாக இருக்கலாம்: பாஜக தலைவர் வினீத் அகர்வால் சர்தா

டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் அதிக அளவு மாசுபடுவதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா காரணமாக இருக்கலாம் என்று உத்திரபிரதேச பாஜக தலைவர் வினீத் அகர்வால் சர்தா தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை கடந்த ஆண்டுகளை காட்டிலும் தீவிரமாக காணப்படுகிறது. காற்றுமாசுபாட்டினால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர். போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு கூட விடுமுறை அறிவிக்கப்பட்டது. நீதிமன்றமும் காற்று மாசுபாடு விவகாரத்தில் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி காற்று மாசுபாட்டிற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா காரணமாக இருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் சர்தா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய போது, இரு அண்டை நாடுகளில் ஒன்றுதான் இந்தியாவுக்கு விஷ வாயுக்களை பரப்பியிருக்கலாம். பாகிஸ்தான் ஏதேனும் விஷ வாயுவை வெளியிட்டுள்ளதா என்பதை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்றதிலிருந்து பாகிஸ்தான் விரக்தியடைந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாததால் பாகிஸ்தான் தந்திரங்களை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதற்கு குண்டுவெடிப்பு மற்றும் தொழிற்சாலைகளின் நச்சு வாயுகள் வெளியேற்றமே காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மக்கள் கூறுகின்றனர். விவசாயி நம் நாட்டின் முதுகெலும்பாகும். விவசாயிகளையும் தொழில்களையும் குறை கூறக்கூடாது. மோடியும் அமித்ஷாவும் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் திறன் கொண்டவர்கள். மோடி மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணாவை போன்றவர் . அதேபோல் அர்ஜூனனை போன்றவர் அமித்ஷா. இந்த விஷயத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்  எனத் தெரிவித்தார்.

Tags : Vineet Agarwal Sarda ,China ,Pakistan ,Delhi ,BJP , Delhi, air pollution, Pakistan, China, may be the cause, BJP leader
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்