×

குண்டும், குழியுமாக மாறிய திருவப்பாடி-பேராவூரணி சாலை

அறந்தாங்கி: திருவப்பாடியில் இருந்து பேராவூரணி செல்லும் சாலை குண்டும்; குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணியில் இருந்து கோட்டைப்பட்டினம், மீமிசல் செல்லும் பேருந்துகள் பெருமகளூர், அத்தாணி, திருவப்பாடி, கட்டுமாவடி வழியாக சென்று வருகின்றன. தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது.

இந்த சாலையில் அத்தாணி, பெருமகளுர், பேராவூரணி, சங்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும், பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கும் ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர்.
பட்டுக்கோட்டை, பேராவூரணி, வடகாடு, கொத்தமங்கம், கீரமங்கலம் பகுதிகளில் இருந்து கடலோர பகுதிகளுக்கு காய்கறி, பழங்களும், கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், மீமிசல், புதுக்குடி, முத்துக்குடா பகுதிகளில் இருந்து பெருமகளூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு மீன், இரால், நண்டு போன்ற கடல் உணவுகளும் வாகனங்கள் மூலம் செல்கின்றன.

இந்த போக்குவரத்து முக்கியத்துவம் பெற்ற சாலையில் கடந்த சில ஆண்டுகளாக திருவப்பாடி கடைவீதி, அத்தாணி உள்ளிட்ட இடங்களில் சாலைகள் சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறிவிட்டன. சமீபத்தில் பெய்த மழையில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிட்டது. சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் செல்லும் வாகனங்களின் பட்டைகள் உடைந்து சேதமடைகின்றன.

மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் வாகனத்துடன் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த திருவப்பாடி-பேராவூரணி சாலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road , Road
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...