×

கை கொடுத்தது வடகிழக்கு பருவமழை காரைக்கால் மாவட்டத்தில் 11 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி

காரைக்கால்: காவிரியின் கடைமடை பகுதியான காரைக்காலில் 30 ஆண்டுகளுக்கு முன் 25 முதல் 30 ஹெக்டேர் நிலப்பரப்பில் சம்பா மற்றும் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் காவிரி நீர் வரத்து இல்லாமை, பருவமழை இல்லாமை காரணமாக அது கொஞ்சம், கொஞ்சமாக குறுகி தற்போது 11 ஆயிரம் ஏக்கர் விவசாயம் என சுருங்கிவிட்டது. புதுச்சேரியின் நெற்களஞ்சியமான காரைக்காலில் நாளுக்கு நாள் விவசாயம் குறைந்து வருவது விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக காவிரி நீர் என்பது கடைமடை விவசாயிகளுக்கு கானல்நீரான நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக காரைக்காலில் உள்ள ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அரசலாற்றின் குறுக்கேயுள்ள அகலங்கண்ணு மதகணை உள்ளிட்ட அனைத்து ஆறுகள், வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. வடிகால் பகுதிக்கு காவிரி நீர் கடைசியாகத்தான் வந்து சேரும். அதை விட இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கொடுத்த கனமழை, காரைக்கால் விவசாயிகளுக்கு வரமாகவே அமைந்தது. கனமழை காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பியதால் வேளாண் பணிகள் காரைக்காலில் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
நடப்பாண்டில் காரைக்கால் மாவட்டத்தில் 11 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. மீதமுள்ள நிலங்களிலும் நேரடி நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள நிலையில் ஏடிபி என்றழைக்கப்படும் ஆடுதுறை 46 ரக நெல் 40 சதவீதமும், பிபிடி என்றழைக்கப்படும் ஆந்திரா பொன்னி ரக நெல் 35 சதவீதமும் பயிரிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 15 சதவீதத்தில் வெள்ளை பொன்னி, டிகேஎம் 13 உள்ளிட்ட கலப்பு வகை நெற்பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

காவிரி நீரும் கிடைக்காமல், மழை நீரும் இல்லாமல் தவித்த காரைக்கால் விவசாயிகளுக்கு சமீபத்தில் பெய்த மழை ஓர் வரமாக அமைந்ததால் மாவட்டம் முழுவதும் வேளாண்மை பணிகள் விறு, விறுப்புடன் நடைபெற்று வருகின்றன. விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல். களை எடுத்தல், நாற்று பறித்தல் மற்றும் நடவு நடுதல் உள்ளிட்ட வேளாண் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக தண்ணீரின்றி காய்ந்து, வெடித்து வறண்டு கிடந்த நிலங்களெல்லாம் தற்போது மனம் குளிர பசுமையாய் காட்சி அளிக்கின்றன. எங்கு திரும்பினாலும் பச்சை பசேலென காற்றோடு அசைந்தாடும் நாற்றுகள் கண்களை குளிர்விக்கின்றன. ஆனால் விதை நெல் வழங்குவது, விவசாயத்திற்கு தேவையான அடி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வழங்குவது உள்ளிட்டவற்றில் வேளாண் துறையினர் அலட்சியம் காட்டி வருவதால் காரைக்காலில் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

வேளாண் பணிகளுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ், டிஏபி மற்றும் ஜிப்சம் உள்ளிட்ட அடி உரங்கள் கிடைக்காததால பல பகுதிகளிலும் விவசாயம் செய்ய முடியாமல் காரைக்கால் விவசாயிகள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆண்டு காரைக்காலில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இருந்தும் அடி உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காரைக்கால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காரைக்கால் மாவட்ட வேளாண் துறையினரின் அலட்சிய போக்கினால் பல்வேறு இடங்களிலும் வேளாண்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை உடனே வழங்க வேண்டும் என காரைக்கால் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாசிக் நிறுவனத்தை மீண்டும் இயக்க வேண்டும்

காரைக்காலில் கடந்த பல வருடங்களாக இயங்கி வந்த புதுச்சேரி வேளாண் துறையின் சார்பு நிறுவனமான பாசிக் நிறுவனம் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியிலும் 10க்கும் மேற்பட்ட பாசிக் நிறுவனங்கள் விவசாயிகளுக்கான உரம், பூச்சி மருந்து, விதைகளை வழங்கி வந்தது. தற்போது நிதி நெருக்கடியால் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு விட்டது. விவசாயிகளுக்கான மானியம் வழங்கப்பட்டாலும் காரைக்காலில் தனியார் கடைகளிலும் உரத்தட்டுப்பாடு நிலவுவதால் மீண்டும் பாசிக் நிறுவனத்தை இயக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். அதே போல் நெல் அறுவடையின் போது, காலத்தோடு நெல் கொள்முதல் நிலையங்களையும், சேமிப்பு கிடங்குகளையும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும். இல்லையேல் வழக்கம்போல் தமிழக பகுதியில் நெல்லை குறைந்த விலைக்கு விற்கும் அவலம் ஏற்படும் என வேதனையுடன் தெரிவித்தார்.

யூரியா கிடைக்காமல் பெரிதும் பாதிப்பு

இது குறித்து ஜெயராமன் என்ற விவசாயி கூறுகையில், காரைக்கால் பொன்பத்தி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது காரைக்கால் பகுதியில் காவிரி நீரும் முழுமையாக வராததால், சமீபத்தில் பெய்த கனமழையை நம்பி விவசாய பணியை தொடங்கி இருக்கிறோம். இந்த நேரத்தில் யூரியா கிடைக்காததால். பெரிதும் பாதிப்பு அடைந்து இருக்கிறோம். எனவே யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். பொன்பத்தி கிராமத்தில் விவசாயத்திற்காக போர் இருப்பதாகவும், அதில் தற்போது உப்பு தண்ணீர் மட்டுமே கிடைப்பதால் அது விவசாயத்திற்கு பயன்படாத சூழ்நிலை உள்ளது. அதையும் அரசு கவனத்தில் கொண்டு புதிய போர்வெல் அமைத்து நல்ல தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

Tags : Hand ,district ,Karaikal , Monsoon
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...