×

மழைநீர் சேமிப்பு திட்டத்தில் ஊரணியில் தண்ணீர் பெருக்கிய கிராமமக்கள்

சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே 100 சதவீதம் மழைநீர் சேமிப்பு திட்டம் இருந்த மைக்கேல்பட்டணம் கிராமத்தில் அத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஊரணியில் தண்ணீரை பெருக்கினர். குடிநீர், விவசாயத்திற்கு கைகொடுக்கும் என கிராமமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 8 வருடங்களாக தொடர் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. போதிய மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நீர் ஆதாரங்கள் தூர்ந்து போனதால், கிராமங்களில் கடும் குடிநீர் பிரச்னை நிலவி வந்தது. மேலும் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர், கமுதி, கடலாடி தாலுகாகளிலுள்ள ஆறுகள், பிரிவு கால்வாய், வரத்து கால்வாய்களில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்கள் பெரும்பான்மையாக அகற்றப்படாமல் உள்ளது. மண்மேடுகளால் தண்ணீர் செல்ல முடியாமலும், தேங்க முடியாமலும் மழை காலத்தில் மழைநீர் வீணாகி கடலில் கலந்து வருகிறது.

இயற்கை கொடுக்கும் மழை தண்ணீரை சேமித்து வைப்பதற்கு போதிய கட்டமைப்பு வசதிகளை, திட்டமிட்டு செயல்படுத்த அலுவலர்கள் முன் வராத காரணங்களால் மாவட்டம் முழுவதும் ஆண்டு தோறும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் மாவட்டத்தின் பிரதான தொழிலான விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குடிநீர் ஆதாரங்களும் சரிவர அமையாததால், குடி தண்ணீருக்காக பொதுமக்கள் குறிப்பாக கிராமமக்கள் கோடை காலத்தில் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருவது வழக்கமான நடைமுறையாக மாறி வருகிறது.

கடந்த 2001ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 429 கிராம பஞ்சாயத்துகளிலுள்ள அனைத்து அரசு கட்டிடங்கள், ஊரணிகளில் கட்டாயமாக மழைநீர் சேமிப்பு திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. விருப்பத்தின் பேரில் வணிக வளாகங்கள், வீடுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டத்தில் சேமித்து இறங்கிய மழை தண்ணீரின் நீரோட்டத்தால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளிலுள்ள நீர்மட்டம் அதிகரித்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. நாளடைவில் அரசு மற்றும் அதிகாரிகள் மழைநீர் சேமிப்பு திட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால், குழாய்கள், தொட்டிகள் சேதமடைந்து போனது. மழை தண்ணீரை சேமிக்க வழியில்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் முதுகுளத்தூர் ஒன்றியம், மைக்கேல்பட்டணம் கிராமத்தில் கடந்த 2001-02ம் ஆண்டுகளில் வீடுகள், ஊரணியில் மழைநீர் சேமிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது நல்ல மழை பெய்து வருவதால், பழைய மழைநீர் சேமிப்பு உள்கட்டமைப்புகள் வழியாக ஊரணிக்கு தண்ணீர் வந்து பெருகி கிடக்கிறது. 5 வருடங்களுக்கு பிறகு ஊரணி பெருகியதால் மைக்கேல்பட்டணம் மட்டுமின்றி அருகிலுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயனடைவர் என்றும்,  ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து உவர்ப்பு தண்ணீர் நல்லதண்ணீராக மாறி குடிப்பதற்கும், இப்பகுதியில் கோடையில் செய்யப்படும் பருத்தி விவசாயத்திற்கும் கைகொடுக்கும் என கிராமமக்கள் நம்புகின்றனர்.

இது குறித்து  முன்னாள் பஞ்சாயத்து தலைவர்  கூறும்போது, கடந்த 2002ம் ஆண்டு மைக்கேல்பட்டணம் கிராமத்திலுள்ள 120 வீடுகளில் மழைநீர் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. வீடுகளின் மேற்கூரைகளில் இருந்து இறக்கப்பட்ட குழாய் இணைப்பு மூலம் கிராமத்தின் மையத்திலுள்ள ஊரணியில் விடப்பட்டது. அப்போது ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ஊரணி கரையை பலப்படுத்தி சிமென்டிலான தடுப்புச்சுவர் கட்டப்பட்டு, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேமிப்பு தொட்டி உள்ளிட்ட உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டது. ஊரணியில் தண்ணீர் பெருகியவுடன் அருகிலிருக்கும் திறந்தவெளி கிணறு மூலம் கிராமத்திற்கு தண்ணீர் கடந்த 14 வருடங்களாக வழங்கப்பட்டு வந்தது. தண்ணீர் தட்டுப்பாடுள்ள அருகிலிருக்கும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பயன்படுத்தி வந்தனர்.

தொடர் வறட்சியால் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இந்த ஊரணி வறண்டு போய் காணப்பட்டது. தற்போது மழை பெய்ததால் பழைய மழைநீர் சேமிப்பு உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் தண்ணீர் பெருகி விட்டது. இதனால் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது. மேலும் இப்பகுதியில் கோடை விவசாயமாக பருத்தி பயிரிடப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களில் போடப்பட்டுள்ள உவர்ப்பு தன்மையுள்ள ஆழ்துளை கிணறு தண்ணீரின் தன்மை மாறி நல்ல தண்ணீர் கிடைக்கும். இதனால் பருத்தி விவசாயம் செழிப்படையும். எனவே மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்தினால் வறட்சி, குடிநீர் தட்டுபாடு என்பதே வராது என்கிறார்.

Tags : rain water storage scheme , Rainwater
× RELATED மழைநீர் சேமிப்பு திட்டத்தில் ஊரணியில் தண்ணீர் பெருக்கிய கிராமமக்கள்