×

நாங்குநேரி அருகே சாலையில் தடை ஏற்படுத்தி வழிப்பறி முயற்சி?

நாங்குநேரி: நாங்குநேரி அருகே சாலையில் தடைகளை ஏற்படுத்தி வாகனங்களில் வழிப்பறி செய்யும் முயற்சி நடப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். நாங்குநேரி அடுத்த மறுகால்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை விலக்கிலிருந்து வரமங்கைபுரம் வழியாக மீனவன்குளம், கள்ளிகுளம், அப்பர்குளம், காடுவெட்டி, நடுவக்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் கிராமச் சாலை உள்ளது. அவ்வழியாக அப்பகுதியைச் சேர்ந்த வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. அதில் கடந்த மாதம் ஸ்ரீவரமங்கைபுரத்தையொட்டிய காட்டுப்பகுதியில் உள்ள சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக பழுதான ஜல்லிக்கல் ஏற்றி வந்த மர்ம டிராக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் தகவலளித்தும் போலீசார் பழுதான அந்த வாகனத்தை அப்புறப்படுத்த முன்வரவில்லை. இதனால் அவ்வழியாக செல்வதற்கு வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டன.

தற்போது மர்மநபர்கள் அங்கு கிடந்த பழைய கல்செக்கு உரலை டிராக்டரின் அருகே சாலையில் போட்டு தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிறிய வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் கடந்து செல்கின்றன. இரவு நேரங்களில் அதேபகுதியில் மர்ம நபர்கள் நடமாடுவதாகவும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இச்செயல் செயற்கையாக சாலையில் தடையை ஏற்படுத்தி வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி நடத்த திருடர்கள் மேற்கொண்டுள்ள முயற்சியாக இருக்குமோ என ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே ஸ்ரீவரமங்கைபுரம் சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை போலீசார் அகற்றி பாதுகாப்பளிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : road ,Nankuneri Robbery , Robbery
× RELATED தனியார் அடுக்குமாடி குடியிருப்பில்...