×

சபரிமலை சீசனுக்கான ஜவுளி உற்பத்தி தீவிரம்: உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

குமாரபாளையம்: தீபாவளியை கருத்தில் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள ரகங்கள் தேக்கமடைந்ததால் ஏமாற்றத்திற்குள்ளான ஜவுளி உற்பத்தியாளர்கள், சபரிமலை சீசன் கைகொடுக்குமென கருதி அதற்கான ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் வேட்டி, சேலை, துண்டு, ஆயத்த ஆடை ரகங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்ததையடுத்து, இந்த தீபாவளியில் எதிர்பார்த்த விற்பனை இல்லாமல் ஒரு நாள் பண்டிகையாக மாறிப்போனது. இதனால் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் மட்டும், சுமார் ₹50 கோடி மதிப்புள்ள ஜவுளி ரகங்கள் தேங்கிக்கிடக்கிறது.

போதிய விற்பனை இல்லாததால் பண்டிகை கடந்து 10 நாட்களாகியும், இப்பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்கள் திறக்கப்படவில்லை. தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். ஒரு சில விசைத்தறியாளர்கள், வழக்கம் போல் ஏமாற்றத்தை ஏற்றுக்கொண்டு, சபரிமலை சீசனுக்கான ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்து  வருகின்றனர். வரும்16ம்தேதி சபரிமலையில் நடை திறக்கப்பட்டு, 27ம்தேதி வரை நடைபெறும். இந்த சீசனுக்கான கருப்பு, ஆரஞ்சு வேட்டி மற்றும் துண்டுகளை உற்பத்தி செய்யும் பணியை துவக்கியுள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி  ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநில ஐயப்ப பக்தர்களுக்கான தேவையை நிறைவேற்றும் பொருட்டு இந்த ஜவுளி உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இந்த துணிகள் எதிர்பார்த்த அளவு விற்பனையானால், தீபாவளி ஜவுளி தேக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்துவிடலாமென ஜவுளி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags : Sabarimala ,season ,announcement ,Manufacturers , Sabarimala
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...