×

சர்வதேச யோகா,அறிவியல் மையத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் : புற்றுநோய் கண்டறியும் சிடி ஸ்கேன் மையம் மதுரையில் திறந்து வைப்பு

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமையவுள்ள சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மையத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறையின் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

 சர்வதேச யோகா மற்றும் அறிவியல் மையம்

இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாட்டில் தான் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார். இதை தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் 96 கோடி நிதி ஒதுக்கீடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டார். இந்த மையத்திற்கான கட்டுமான பணிக்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இந்த மையத்திற்கான கட்டுமான பணி 65 கோடியும், கருவிகள் வாங்குவதற்கு 10 கோடியும், பர்னிச்சர் வாங்குவதற்கு 10 கோடியும், ஆயில் உறை வைக்கும் பைகள், பனிக்கட்டிகள், இனிமா பாத்திரம், பஞ்சு, அக்குபஞ்சர் ஊசிகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் 40 லட்சம் செலவில் வாங்கப்படவுள்ளது.இந்நிலையில் இம்மையத்திற்கான அடிக்கல்லை முதல்வர் பழனிசாமி நாட்டினார்.

ரூ.10 கோடி மதிப்பில் புற்றுநோய் கண்டறியும் சிடி ஸ்கேன்


அதே போல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில் புற்றுநோய் கண்டறியும் பெட் -  சிடி ஸ்கேன் மையத்தை முதலமைச்சர் பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த சி.டி.ஸ்கேனில் ஸ்கேன் எடுக்க தனியார் மருத்துவமனையில் ரூ.25 ஆயிரம் செலவாகும், ஆனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ.10 ஆயிரம் செலவில் ஸ்கேன் எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருப்பூர், நாமக்கல், கடலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நெல்லை, திருச்சி, தேனியிலும் காணொளியில் கட்டிடங்களை திறந்துவைத்தார்.


Tags : Palanisamy Foundation for International Yoga and Science Center: Opening of Cancer Diagnosis CT Scan Center ,Madurai International Yoga and Science Center ,Madurai ,Palanisamy Foundation: Cancer CT Scan Center of Opening , Yoga, Science, CM, Palanisamy, Attila, Madurai, Rajaji
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி