×

தகுதி நீக்க கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி 11 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவி தப்பியது

புதுடெல்லி: டெல்லி அரசில் ஆதாயம் தரும் பதவி வகித்த 11 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை  தகுதி நீக்கம் செய்யும் கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  நிராகரித்துள்ளார். ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த்  கெஜ்ரிவால், தனது சட்டப்பேரவை உறுப்பினர்களில் போக்குவரத்துத் துறை அமைச்சர்  கைலாஷ் கெலாட் உள்ளிட்ட 11 பேரை மாநில பேரிடர் மீட்பு குழுவின் துணைத்  தலைவராக  நியமித்து இருந்தார். அரசு பதவிகளில் இருப்பவர்கள் யாரும்  ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் இருக்கக்கூடாது என்பது விதிமுறை ஆகும்.  ஆனால், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இந்த 11 எம்.எல்.ஏக்கள் ஆதாயம் தரும்  இரட்டை பதவிகளில் இருப்பதாக வழக்கறிஞர் விவேக் கர் கடந்த 2017ல் வழக்கு  தொடுத்தார்.  அதில், `அரசியல் சட்டப் பிரிவில் பேரிடர் மேலாண்மை  சட்டம் 2005, தேசிய தலைநகர் டெல்லி பிரதேச சட்டம் 1991ன் கீழ்,  எம்எல்ஏக்கள் யாரும் மாநில பேரிடர் மீட்பு குழுவின் துணைத் தலைவராக பதவி  வகிக்க முடியாது. ஆனால் இந்த 11 எம்எல்ஏக்களும் டெல்லியில் உள்ள 11  மாவட்டங்களின் பேரிடர் மீட்பு குழுவின் துணைத் தலைவர்களாக  நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று  கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆதாயம் தரும் பதவி வகித்த ஆம்  ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சீவ் ஜா, நிதின் தியாகி, பிரவீன் குமார், பவன்  குமார் சர்மா, தத் சர்மா, ராஜேஷ் குப்தா, சரிதா சிங், தினேஷ் மோகனியா,  அமனதுல்லா கான், கைலாஷ் கெலாட், ஜர்னைல் சிங் ஆகிய 11 எம்எல்ஏக்களை தகுதி  நீக்கம் செய்யக்கோரும் மனு ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். முன்னதாக,  இது தொடர்பாக ஜனாதிபதி கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை  கேட்டிருந்தார். அப்போது, இதற்காக அவர்களுக்கு ஊதியமோ இதர வசதிகளோ தரப்படாததால், எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அந்த பரிந்துரைப்படி, இவர்களை தகுதி  நீக்கம் செய்வதை நிராகரிக்க ஜனாதிபதி கடந்த 28ம் தேதி முடிவெடுத்ததாக ஜனாதிபதி மாளிகையின் செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : President ,AAP MLAs , Elimination, President, AAP MLAs
× RELATED பாஜக அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பிரபல ஜோதிடர் நியமனம்