×

பாகிஸ்தானுடன் 2வது டி20 ஸ்மித் அதிரடியில் ஆஸி. அபார வெற்றி

கான்பெரா: பாகிஸ்தான் அணியுடனான 2வது டி20 போட்டியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான்,  3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் டி20  போட்டி மழை காரணாக கைவிடப்பட்டது. இந்நிலையில் 2வது டி20  போட்டி கான்பெராவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர் கேப்டன் பாபர் ஆசம் மட்டும் பொறுப்பாக விளையாட மற்றவர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர். தொடர்ந்து 16வது ஓவர் வரை தாக்குப்படித்த பாபரை வார்னர் ரன் அவுட்டாக்கினார். அப்போது அவர் 38 பந்துகளில் 50 ரன் எடுத்திருந்தார்.  பாபருடன் சேர்ந்து பொறுப்பாக விளையாடிய இப்திகார் ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 3 சிக்சர்,  5பவுண்டரியுடன் 62 ரன் விளாசினார். பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு  150 ரன் எடுத்தது.

ஆஸ்திரேலியாவின்  ஆஷ்டன் ஏகார் 2, ரிச்சர்ட்சன், கம்மின்ஸ் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. டேவிட் வார்னர் 20, கேப்டன் ஆரோன் பிஞ்ச் 17 ரன்னில் வெளியேறினர். பென் மெக்டெர்மாட்  தன் பங்குக்கு 21 ரன் எடுத்தார். அதிரடியாக விளையாடிய  ஸ்டீவன் ஸ்மித், பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தார். ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு  151 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.  ஸ்டீவன் ஸ்மித் 80 ரன் (51 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), ஆஷ்டன் டர்னர் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தானின் முகமது இர்பான், இமத் வாசிம், முகமது ஆமிர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, கடைசி போட்டி பெர்த் நகரில் நவ. 8ம் தேதி நடைபெறும்.



Tags : Aussie ,2nd T20 Smith Action ,Pakistan , Pakistan, Smith, Australia
× RELATED நான் ரெடி தான்… கம்மின்ஸ் உற்சாகம்