×

ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெற வசதி: விரைவில் அறிமுகம்

புதுடெல்லி: ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதியை வருமான வரித்துறை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தொலைந்து போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ புதிதாக மாற்று பான் கார்டையும் பெற்றுக் கொள்ளலாம்.  இந்த எலெக்ட்ரானிக் பான் கார்டு (இ-பான்) எந்தவித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும். ஆதார் கார்டு அடிப்படையில் இது வழங்கப்படும். ஆதார் கார்டில் உள்ள விவரங்களை சரிபார்த்த பிறகு, வருமான வரித்துறையில் இருந்து விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பாஸ்வேர்டு வரும். அதை பயன்படுத்தி விண்ணப்பதாரர் தனது பான் கார்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். பின்னர் புதிய இ-பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம். ஆதார் அடிப்படையில் வழங்கப்படுவதால், ஆதாரில் உள்ள புகைப்படம், பெயர், தந்தை பெயர், முகவரி விவரங்கள்தான் பான் கார்டிலும் இடம்பெறும்.

ஆதாரில் உள்ள விவரங்கள் தவிர மற்ற விவரங்களை மட்டும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இதுதொடர்பான மாதிரி திட்டம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதில் சுமார் 62,000 இ-பான் கார்டுகள் 8 நாட்களில் வழங்கப்பட்டது. இதில் குறைபாடு உள்ளதா என ஆய்வு செய்த பிறகு, அடுத்த சில வாரங்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆதார் கார்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், மத்திய அரசு, பான் கார்டுடன் ஆதாரையும் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதிக தொகை பரிவர்த்தனையின்போது, வாடிக்கையாளர் தனது பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தற்போது ஆதார் கார்டு அடிப்படையில் இ-பான் கார்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Tags : Facility , Online, PAN Card
× RELATED பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை